பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனநிலை 277

உண்மையான அமைதி கிடையாது. வித விதமான பூச்சிகள், வண்டுகள் ஓயாமல் இரைச்சலிட்டுக் கொண்டே இருக்கின்றன. ரகம் ரகமான ஒலிகளின் கலவை. திடீர்னு இராப் பறவை ஒன்று அலறுது. ஏதோ ஒரு மிருகம் கத்துது. தூரத்திலே ஒடுகிற ஆற்றுத் தண்ணீர், மேட்டிலிருந்து பள்ளத்தில் விழுகிற ஒசை... அது ஒடுகிற மெல்லொலி பின்னணி இசைபோல ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...

'பெருமாள்! நீ கவனிச்சியா? எங்கும் வளர்ந்து நிற்கிற மரங்கள். செறிவாகத் தென்படுகிற பசுமைப் பரப்பு. செடி கொடிகள், மலையின் பகுதிகள். தூரத்து மலைமுடிகள். இந்த வானம்... இதெல்லாம் எவ்வளவோ ஆனந்தத்தை உண்டாக்குது. மனம் விசாலமாகி, இயற்கையோடு சேர்ந்து, உயரே உயரே பறக்கத் தொடங்குது. இந்த மண்ணும், மலையும், மரமும், வானமும் நம்மோடு சொந்தம் கொண்டாடுகிற மாதிரித் தோனலையா? நாமும் இவற்றுடன் உயர்ந்து நிற்கிற மாதிரி - இந்த மலையெலாம் நான்; மரங்களும் விண்ணும் நான்; எல்லாமே நான் என்று பெருமைப்பட வைக்கிற ஒர் உணர்வு நம்முள் சிலிர்த்தெழுகிறது. இந்த மலையை, மண்ணை, அருவியை, விண்ணை, மனித சமுதாயத்தை அப்படியே தழுவிக் கொள்ள வேண்டும் என்றோர் எழுச்சி ஏற்படுகிறதே. நீ ஏன் வருத்தமா இருக்கிறே, பெருமாள்? ரொம்ப நேரமா நீ அழுகிற மாதிரித் தெரியுதே? ஏன் அழறே?"

பெருமாள் பெருமூச்செறிந்தான்.

'பூசை செய்ய வந்தவங்க முக்கியமான பூசைச் சாமான் இரண்டை எடுத்திட்டு வர, மறந்து போனாங்க. என்னை அனுப்பியிருக்காங்க, கீழே போயி அதுகளைக் கொண்டு வர...' என்றான் கைலாசம்.

"இதோ இருக்கு கீழே உள்ளவங்க தான் என்கிட்டே கொடுத்து அனுப்பினாங்க" என்று பெருமாள் பையை நீட்டினான்.

"நல்லதாப் போச்சு... வா, கோயிலுக்குப் போவோம்" என்று அவனை அழைத்தபடி திரும்பி நடந்தான் கைலாசம்.

போகிறபோதே அவன் மலையின் கம்பீரத்தை, அதன் வனப்பை வியந்து பேசினான். 'மலை மட்டுமல்ல; கடலும், வானின் விரிவும், இயற்கையின் எடுப்பான, மிடுக்கான, வனப்பான சக்திகள் பலவும் இன்னும் கிளர்ச்சி ஏற்படுத்தும். மனிதன் இவற்றோடு இணைந்தவன், இவற்றால் ஆனவன், இவற்றை ரசித்துப் பயன்படுத்தி அனுபவிக்கக் கற்றவன் என்ற