பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284 வல்லிக்கண்ணன் கதைகள்

‘புதுக்குடியிருப்பு' வழக்கம்போல் அமைதியாகவே இருந்தது. ஸ்வப்னா சதா அடைத்த கதவுடன் தான் காட்சி அளித்தது. சில இரவுகளில் அங்கு உயிர்ப்பும் உணர்வும் உற்சாக நாட்டியம் புரிவதும் சகஜமாகி விட்டது.

கிருஷ்ணனும் சாந்தாவும் 'இன்னும் அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லையே! என்று தான் வருத்தப்பட்டார்கள்.

அழகான யுவதியை அந்தி ஒளியில், நன்கு பூத்த எழில்மிகு மந்தாரைபோல், ஒரு நாள் கண்டார் கிருஷ்ணன். அவளோடு, அவளைப் போலவே, இன்னொரு இளம் பெண்ணும் இருக்கிறாள் என்பதை, இருவரையும் சேர்ந்தாற்போல் பார்த்ததன் மூலம், உறுதிப்படுத்திக் கொண்டாள் சாந்தா.

'கப்பல் மாதிரிப் பெரிய காரில்' எப்பவாவது வந்து போகிற விகாரப் பெரிய மனிதர். அந்தப் பெண்களுக்கு எப்படி உறவோ? அவர்களின் போஷகர் அவர்தான் என்பதில் இருவருக்கும் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

அவரைப்பற்றி நல்ல எண்ணம் கொள்ள முடியவில்லை கிருஷ்ணனால். பணம் மிகுந்தவர்களில் அநேகர் செய்வது போல, அவரும் தனது இன்ப சுகத்துக்காக இரண்டு பெண்களைத் தனி வீட்டில் வைத்து, தாராளமாகச் செலவு செய்து வருகிறார் என்றுதான் அவர் முடிவு கட்டினார்.

இந்த எண்ணத்தை தன் மனைவியிடம் சொல்ல அவர் தயங்கவுமில்லை. அவளும் 'ஆமாம், அப்படித்தான் இருக்கும். பாவம், நல்ல பெண்கள், அழகான பெண்கள், ஏனோ இப்படிக் கெட்டுப்போகிறார்கள். இதை எல்லாம் விதி என்றுதான் சொல்லணும். வேறு என்ன சொல்வது?’ என்று ஆறுதல் கூறிக் கொண்டாள்.

பல வாரங்களாக மன உளைச்சல் தந்து கொண்டிருந்த ஒரு பிரச்னைக்கு. சாத்தியமான - சாதகமான விடை ஒன்றைக் கண்டு பிடித்தாயிற்று என்ற திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து அவர்கள் எதிர் வீட்டுக்குப் பெரிய கார் என்றைக்கு வருகிறது. எப்போது போகிறது என்று கவனிப்பதில் அக்கறை காட்டுவதை குறைத்துக் கொண்டார்கள்.

இருந்த போதிலும், கிருஷ்ணனுக்கு இன்னுமொரு பெரிய சந்தேகமும், தெளிவுபெற முடியாத குழப்பமும் அப்படியே இருந்தன. பெரிய காரில், பண எருமை வந்து இரவில் பதினோரு மணிவரை தங்கிவிட்டுப் போகிறது. அதே இரவில், பன்னிரண்டு மணிக்கு மேல் கார் வந்து அழகுப் பெண்ணை அழைத்துப்