பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியிருப்பில் ஒரு வீடு 285

போகிறதே! எங்கே கூட்டிச் செல்கிறது? ஏன்? ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு கார் வருவதாகக் கண்டுபிடித்தார்

ஆகவே, இதில் ஒரு பெரிய மர்மம் இருக்கிறது!’ என்று அவர் அறிவு கூறியது.

கூடிய விரைவிலேயே இந்த மர்மமும் விடுபட்டுப் போயிற்று. காலமும் நிகழ்ந்த சில சம்பவங்களும் தான் தெளிவு ஏற்படுத்தின. கிருஷ்ணன் முயன்று எதுவும் துப்புக் கண்டு பிடித்து விடவில்லை.

ஒரு நாள் பெரிய "போலீஸ் வேன்' வந்து, 'ஸ்பல்னா' முன் நின்றது. சட்டப் பாதுகாவலர்கள் வீட்டினுள்ளே போனார்கள். இரண்டு இளம் பெண்களையும் ஒரு முதியவளையும் அழைத்து வந்து, வண்டியில் ஏற்றினார்கள்.

கிருஷ்ணனுக்கு அறிமுகமானவர் ஒருவர் வேனில் இருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்ததில் உண்மைகள் தெரிய வந்தன.

தடி ஆசாமி இதைத் தொழிலாக வளர்த்து, பணம் பண்ணி வாழ்க்கை நடத்துகிறான். சினிமாவில் நடிக்கும் ஆசையினாலும், கணவனோடு நிகழும் சண்டை அல்லது குடும்பத் தகராறு போன்ற பலவிதக் காரணங்களினாலும், வீட்டை விட்டு வெளியேறி, நாகரிகப் பெருநகருக்கு எத்தனையோ இளம் பெண்கள் வருகிறார்கள். அவர்களை ஏமாற்றி, ஆசைகாட்டி, அழைத்து வருவதற்கு அநேக திறமைசாலிகளை அப்பணக் காரன் நியமித்து வைத்திருக்கிறான். இப்படிச் சிக்கும் பெண்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கிறான். பெரிய நட்சத்திரம் ஆக்குவேன் என்று ஆசைகாட்டி, தனது ஆசைகளைத் தணித்துக் கொள்வதோடு, விதம் விதமான பெண்களை அனுபவித்து இன்பம் பெறத் தவிக்கும் பணக்காரர்களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் இவர்களை அனுப்பி வைக்கிறான்.

வசதியோடு, பணத்தோடு, வாழ முடிகிறதே என்பதனால் பல பெண்கள் அவன் சொல்படி நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள் இந்த விதமான பெண்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் வைத்திருப்பதில்லை இவன். வெவ்வேறு வீடுகளில் இரண்டு பேர், மூன்று பேர் என்று வைத்து, போஷித்து, பிஸினஸ் பண்ணி, பணம் சேர்த்து விட்டான். இவனால் ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்கள் இந்தப் பிழைப்பு நடத்த மனம் இல்லாமல் ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். பணக்கார வீட்டு இளைஞன் ஒருவனும் இவன்மீது குற்றம் சாட்டியிருக்கிறான். அதனால், இவன் வசமாகச் சிக்கிக் கொண்டான்.