பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288 வல்லிக்கண்ணன் கதைகள்

படிச்சு கலெக்டர் வேலைக்கா போகப் போறான்! இங்கே கிடந்து வயலில் உழைக்கணும், அல்லது ஆடு மாடு மேய்க்கப் போறான். அவனுக்கு என்னத்துக்கு படிப்பு?’ என்று ஒரே அடியாக முடிவு செய்தது தான் 'தந்தை மகனுக்கு ஆற்றிய உதவி' ஆகும்!

பையன் ஆடு மேய்க்கப் போறேன் என்று ஊர் சுற்றுவது, வயல் காடுகளில் திரிவது, மரங்களின் மீது ஏறுவது, கிட்டிப்புள் விளையாடுவது போன்ற அலுவல்களை உற்சாகமாகச் செய்து வந்தான். அங்கேயே இருந்திருந்தால் அவன் உருப்படாமல் போவான் என்று அப்பன் கருதினான்.

'பட்டனத்துக்கு வந்து மட்டும் நான் என்ன உருப்பட்டு விட்டேன்? உருப்படக் கூடியவன் எங்கே இருந்தாலும் உருப்பட்டு விடுவான். உருப்படாமல் போற கழுதை எந்தச் சீமைக்குப் போனாலும் உருப்படாது தான்!” என்று பிற்காலத்தில் பூவுலிங்கம் அநேக தடவைகள் எண்ணியது உண்டு. இந்த அறிவு அவனுக்கு ஆதி நாட்களில் இவ்வாறு வேலை செய்தது இல்லை!

அந்தக் காலத்தில் அவன் அந்த 'தரித்திரம் பிடித்த’ பட்டிக்காட்டை விட்டு வெளியேற வசதி கிட்டியதை பெரிய அதிர்ஷ்டம் என்றே கருதினான். 'ஓட்டை உடைசல் நத்தம் புறம்போக்குப் பட்டிக்காடு’ என மதிக்கப்பட்ட ஊரை விட்டு நாகரிகத்தின் சிகரமாகத் திகழ்ந்த பட்டணத்துக்கே போக முடிவது கிடைத்ததற்கு அரிய பாக்கியம் என்று தான் அவனை அறிந்திருந்த பலரும் எண்ணினார்கள்.

'சுரத் இல்லாத சூழலிலிருந்து பரபரப்பு மிகுந்த பெரு நகரத்துக்குச் செல்வது அந்தப் பையனுக்கு அதிகமான உற்சாகத்தையே தந்தது. பட்டணத்துக்கு வந்து சேர்ந்ததும், சில தினங்கள் வரை அவனுக்கு ஆனந்தம் குறையாமல் தானிருந்தது. புதிய சூழ்நிலை, புதிய முகங்கள், புதிய அலுவல்கள் - எல்லாம் மகிழ்ச்சி அளித்தன. - .

ஆனால், நாளாக ஆக அந்த வாழ்க்கை முறையும் பூவுலிங்கத்துக்கு அலுப்பு தருவதாகவே தோன்றியது. 'இப்படி வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்து, ஒயாது வேலை செய்துகொண்டிருப்பதற்கு பட்டணத்தில் இருப்பானேன்? பட்டிக்காட்டிலாவது இஷ்டம் போல் சுற்றித்திரிய முடிந்தது. நம் ஊருப் பக்கத்தில் டவுணில் பலசரக்குக் கடைகளில் சில பையன்கள் வேலை செய்கிறார்கள். காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி முடிய கடையிலேயே அடைபட்டுக் கிடக்கிற அவர்கள் டவுண் பூராவையும் சுற்றிப் பார்த்தது கூடக்