பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரிழப்பு 289

கடையாது. நான் பட்டணத்தில் பெரிய வீட்டில் வேலைக்கு இருக்கிறேன் என்று பேர்தான் பெரிசு. வெளியே போய் பட்டணத்தைப் பார்க்கக் கூட நேரமும் இல்லை; வசதியும் இல்லை. இங்கே இப்படி வந்து ஜெயில் வாழ்க்கை அனுபவிப்பதைவிட, நம்ம பக்கத்து டவுணில் பலசரக்குக் கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம்' என்று அவன் மனக்கசப்புடன் எண்ணலானான்.

பிறகு நாளடைவில் அவன் சுற்றித் திரிந்து வேடிக்கை பார்ப்பதற்கு நேரம் தேடிக்கொண்டான். உண்பதற்கு உறங்குவதற்கும் இடவசதி இருந்தால், வேலை எதுவும் செய்யாமல் சும்மா சுற்றி வேடிக்கை பார்த்துப் பொழுது போக்குவதற்கு மிகவும் வசதியான இடம் இந்தப் பட்டணம் என்று அவனுக்குத் தோன்றியது. c

பட்டணத்துக்கு வந்துவிட்ட பையனை அவன் தாயோ தகப்பனோ ஊருக்குக் கூப்பிடவே இல்லை. ஒரு பிள்ளைக்குச் சோறு போட்டு, துணிமணிகள் எடுத்துக் கொடுத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு இல்லாமல் தொலைந்ததே என்றுதான் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். பொருளாதார நிலைமை உணர்வுகளையும் உறவுகளையும்விட வலிமை மிக்கதுதான்!

ஆரம்ப காலத்தில் 'ஊருக்குப் போகணும்’ எனும் வெறும் நினைப்பு தீபாவளி சமயத்திலும் பொங்கல் திருநாளின் போதும் தான் பூவுலிங்கத்துக்கு தீவிரமாக வேலை செய்தது. 'இப்போதெல்லாம் ஊரில் இருக்கணும். எவ்வளவு ஜோராக இருக்கும் தெரியுமா!' என்று அவன் தன் நெஞ்சோடு புலம்பிக்கொள்வது வழக்கம்.

கைலாசம் பிளளையோ, அவரது குடும்பத்தினரோ அடிக்கடி சொந்த ஊருக்குப் போகும் சுபாவம் பெற்றிருக்கவில்லை. அபூர்வமாக எப்போதாவது, நாலைந்து வருஷங்களுக்கு ஒரு தடவை, போய்வருவது வழக்கம். பிள்ளை அவர்கள் மாத்திரம் ஊர் பக்கம் போகிறபோது, 'நீ இங்கேயே இவர்களோடு இரு. உன்னை ஊரிலே யாரு தேடுறாங்க?' என்று பூவுலிங்கத்தைத் தட்டிக் கழித்துவிடுவார். குடும்பத்தினர் அனைவரும் புறப்படும் சமயத்தில், 'ஏண்டா, நீயும் இவங்களோடு ஊருக்குப் போய் விட்டால் நான் என்னடா செய்வேன்? நீ ஊருக்குப் போயி என்ன பண்ணப்போறே? சும்மா இங்கேயே இரு!' என்று உத்திரவு போடுவார்.

எப்படியோ தடங்கல்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தன அவனுக்கு பூவுலிங்கத்தின் தந்தை பலவேசம், மகன் பட்டணத்துக்குப் போன மறு வருஷமே மண்டையைப்