பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290 வல்லிக்கண்ணன் கதைகள்

போட்டுவிட்டான். அவன் காரியம் எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் பட்டனத்தில் இருந்தவர்களுக்கு விஷயம் தெரிந்தது. பூவுப்பயலுக்கு அண்ணன்களும் தம்பிகளும் நிறைய இருந்ததால், அப்பனின் இறுதி யாத்திரைக்கு வழி அனுப்பி வைக்க அவன் வந்தே ஆகவேண்டும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

இரண்டொரு வருஷங்களில் தாயும் சிவபதம் சேர்ந்தாள். இந்த மகனின் துணை அப்பொழுதும் எதிர்பார்க்கப்படவில்லை.

'நான் ஊரைவிட்டு வந்து நாலைந்து வருஷங்கள் ஆச்சுது. அங்கே போகணுமின்னு ஆசையாக இருக்கு. ஒருதடவை போயிட்டு வாறேனே!' என்று அவன் பிள்ளைவாளிடம் கெஞ்சினான். -

'நீ என்னடா சுத்தப் பைத்தியக்காரனா இருக்கிறே? இது ஊரு இல்லாமல் காடா? அந்தப் பாடாவதிப்பய ஊரிலே உனக்கு என்ன வச்சிருக்குது? இங்கே கிடைக்கிற சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு பேசாமல் கிடப்பியா? ஊரு ஊருன்னு தொன தொணக்கிறியே! என்று கைலாசம் பிள்ளை உபதேசித்தார்.

அவன் வருகையை அவனுடைய அண்ணன்மாரும் விரும்பவில்லை. 'பூவு எசமான் கண்காணிப்பில் இருக்கிறபடியே இருக்கட்டும். இங்கே இப்போது ரொம்பவும் கஷ்ட தசை அவன் நல்லபடியாக வாழ கடவுள் வழிகாட்டிவிட்டதற்கு நாங்கள் சந்தோஷப்படுகிறோம் என்று பெரிய அண்ணன் எழுதி அறிவித்து விட்டான்.

ஆகவே, பூவுலிங்கம் தனது எண்ணத்தைத் தன் உள்ளத்திலேயே வைத்து, தானாகவே புழுங்கிக் குமைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

அவன் கையில் பணம் சேர வழி ஏது? பிள்ளை வீட்டிலேயே அவன் வளர்ப்புப் பிள்ளை மாதிரி வாழ்ந்தான். சம்பளம் என்று எதுவும் அவன் கையில் தரப்படவில்லை. எனினும், அவன் குறை கூறுவதற்கு வழி இல்லாமல் அவனது தேவைகள் எல்லாம் சரிவர பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.

இந்த விதமாகப் பத்து வருஷங்கள் ஒடிவிட்டன. திடீரென்று கைலாசம் பிள்ளை செத்துப்போனார். அவரும் மனிதப்பிறவி தானே!

கைலாசம் பிள்ளையின் மனைவியும் மகளும் பட்டணத்திலேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். 'பூவு, நீ வேண்டுமானால் ஊருக்குப்போ. செலவுக்குக் கொஞ்சம் பணம் தாறேன்’ என்று பெரிய அம்மாள் சொன்னாள்.

ஒரே அடியாக ஊருக்குப் போய் என்ன செய்வது என்பது பெரும் பிரச்னையாக அவனை மிரட்டியதால், அந்த வாய்ப்பை அவன் பயன்படுத்திக்கொள்ளவில்லை.