பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரிழப்பு 291

பூவுலிங்கம் வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள், திருப்பங்கள், வளர்ச்சிகள், தேக்கங்கள் எல்லாம் ஏற்பட்டன. அவன் வேறொருவர் வீட்டில் வேலையில் சேர்ந்தது. அந்த இடம் பிடிக்காமல் வெளியேறியது, கடை கடையாக வேலைக்கு அமர்ந்து காலம் கழிக்க முயன்றது எல்லாம் அவனுடைய வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட்ட மேடு பள்ளங்கள் தான். 'திருப்பம்' என்று, அவனது இருபத்தைந்தாவது வயசில் நிகழ்ந்த திருமணத்தைச் சொல்லலாம். -

சிறு அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு பெரியவர் தனது மகளை அவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார். அதுமுதல் பூவுலிங்கம் தனி அந்தஸ்தையும் பெரிய மனிதத் தன்மையையும் அடைய வசதிகிட்டியது. குடும்பத் தலைவர், கடை முதலாளி என்ற தகுதிகள் தாமாகவே வந்து சேர்ந்தன.

குடும்பமும் பொறுப்புகளும் பெருகப் பெருக, பூவுலிங்கத்தின் தனிப்பட்ட ஆசை - சொந்த ஊரை ஒரு தடவையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற நினைப்பு - அடிவானம் மாதிரி எட்ட எட்டப் போய்க் கொண்டே இருந்தது.

மனைவி வீடு 'தெற்கத்திச் சீமையில்' எங்காவது இருந்திருந்தாலாவது அடிக்கடி அங்கே போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். அதற்கும் இடம் இல்லாமல் போய்விட்டது.

மனித மனம் விசித்திரமானதுதான். கிடைக்கவில்லை - சமீபத்தில் கிடைக்கவும் கிடைக்காது - என்ற நிலையில் உள்ள விஷயங்களை வைத்துக்கொண்டே அது சதா தறி அடிக்கிறது. எண்ணப் பின்னல்களையும் கனவு நெசவுகளையும் செய்து, அமைதியைக் கெடுக்கிறது.

பெரிய மனிதனாகிவிட்ட பூவுலிங்கத்துக்கு, தனது சிறு பிராயச் சூழ்நிலை - அந்தக் காலத்தில் வறண்டதாய், அலுப்புத் தருவதாய் தோன்றிக்கொண்டிருந்ததுதான் - கனவின் இனிமைகளும் கற்பனைப் பசுமைகளும் நினைவின் மினு மினுப்பும் கலந்த அற்புத உலகமாக நிழலிட்டது. சிறு பிள்ளைகளோடு விளையாடிக் களித்த இடங்கள் பலவும் திடீர் நினைவுகளாய் குமிழ் தெறிக்கும் அடிக்கடி.

தென்னந்தோப்புகள், பெரிய வீட்டின் வாசலில் இருபுறமும் ஓங்கி வளர்ந்து நின்ற மரமல்லிகை விருட்சங்கள் பூத்துக் கொட்டும் மணம் நிறைந்த பூக்கள், மதகுப் பாலம், அங்கு கொட்டுகிற சிறு அருவி நீர் - இப்படி எத்தனை எத்தனையோ சிறுசிறு இனிமைகள் நெஞ்சில் தைக்கும் நினைவுகளாய் தலையெடுத்தன.

பூவுலிங்கத்தின் கண்முன்னே எவ்வளவோ மாறுதல்களும் அழிவுகளும் வளர்ச்சிகளும் நிகழ்ந்துகொண்டிருந்தன.