பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலுக்குத் தேவை 39

முழு நில்வு போன்ற உன் எழில் முகத்தில் அரும்பும் புன்னகை தனியொரு புது நிலவாய் ஒளிர்கிறது. என் உள்ளத்தில் எண்ணற்ற அலைகள் பொங்கி எழச் செய்யும் முழுமதியே...'

சித்ராவின் தோற்றம் இவ்விதமான எண்ணக் கிளர்ச்சிகளை உண்டாக்கி விடும் தான். அவள் தினம்தோறும் அவன் வாழ்வில் இனிமை சேர்த்த அன்பின் வடிவம். இந்த மூன்று மாதங்களாக அவளைக் காண முடியாதவாறு காலம் சதி செய்து விட்டது.

கவிதைகளால் வர்ணித்து, கற்பனையில் மிதக்கச் செய்து ஒரு பெண்ணைத் தன் காதலுக்கு அடிமையாக்கிக் கொள்வது மிகச் சுலபம். ஆனால் அக்காதல் வளர்ந்து, தளர்ந்து, வேரூன்றிக் கொள்ளத் தேவையானது "பணம்தான். பணம் இன்றேல் காதல் காற்றில் பறக்கும்" என்கிறார் இக்கதாசிரியர்.

நம்பிராஜன் நெடுமூச்சு உயிர்த்தான். கவி உள்ளம் படைத்தவன் அவன். முழுக்கவி ஆகிவிடவில்லை இன்னும். கவிஞன் ஆகவேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. அவன் எண்ணங்களையும் கனவுகளையும் அவ்வப்போது இஷ்டம் போல் எழுதி வைக்கத் தவறியதில்லை. அவனது நண்பர்கள் அவனை 'அரைக்கவிஞர்' என்று கேலியாகக் குறிப்பிடுவது வழக்கம். 'அரைக்கிறுக்கு' என்று சிலர் சொல்வது உண்டு.

கவிஞர் என்றால் அவர் கவிதைகள் எழுதினாலும் எழுதாவிட்டாலும் அவருக்குக் காதலி என்று ஒருத்தி அவசியம் இருக்க வேண்டும். அவர் அவளால் காதலிக்கப்படா விட்டாலும், அவளை அவர் காதலித்து, உணர்ச்சி வசப்பட்டு சதா கவிதைப் புலம்பல்களைக் கொட்டிக் கொண்டு இருக்க வேண்டியது அவசியம்!

இப்படி ஒரு நண்பர் சொன்னார். அவர் பரிகாசமாகத்தான் பேசினார். ஆனால் அதில் உண்மை இருக்கிறது. உலக மகா கவிகளின் வரலாறுகளும் இதைச் சுட்டிக் காட்டுகின்றன என்று நம்பிராஜனின் கவியுள்ளம் உறுதிப்படுத்தியது. ‘காதல் உதயத்தின் பொன் ரேகைகள் எட்டிப் பார்க்கும் என்று என் விழிச் சாளரங்களைத் திறந்து வைத்து நான் காத்துக் கிடந்த காலத்தின் அளவு தான் எவ்வளவு!

செம்பட்டு உடுத்து, செம்மலர்சூடி, செவ்விய கன்னங்கள் தனி ஒளி காட்ட, வந்த அழகு மகளே! உஷை நிகர்த்த பெண்ணே உன் கண்ணின் சுழற்சி என்னை வெற்றி கொண்டது. உன் மாதுளை மொக்கு உதடுகளில் மலர்ந்த முறுவல், ஆகா, நீ தான் அவள்! எவளுக்காக நான் காத்திருந்தேனோ