பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைத்ததை முடிக்காதவர் 45

இருந்தாலும், ஊரின் இளவட்டங்களுக்கு அவன்தான் இலட்சிய ஹீரோ. சின்னப் பையன்களுக்கு, அண்ணாந்து பார்த்து வியந்து போற்றப்பட வேண்டிய ஒளிச்சுடர் அவன். எப்பவும் அவனைச் சுற்றி இளைஞர்கள் கூடியிருப்பார்கள். அவனைப் பார்க்கவும், அவன் ஏதாவது வேலை சொன்னால் உடனடியாகச் செய்து முடிக்கவும் சின்னப் பையன்கள் காத்து நிற்பார்கள்.

சிங்காரவேலுவின் நாடகமோகம் தான் இதற்கெல்லாம் காரணம்.

சிவராத்திரி, தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு, கோயில் திருவிழா சமயம் முதலிய விசேஷ நாட்களில், கோயிலை ஒட்டியிருந்த பொட்டல் வெளி ஊரின் திறந்தவெளி அரங்கமாக மாறித் திகழும். சிங்காரவேலுவின் இயக்கத்தில் சத்தியவான், மார்க்கண்டேயர், வள்ளித் திருமணம் போன்ற நாடகங்கள் நடித்துக் காட்டப்படும்.

சில சமயம் சிங்காரவேலுவே சமூக நாடகம் என்று ஏதாவது எழுதி, நண்பர்களை நடிக்கத் தயார் பண்ணுவதும் உண்டு. அவன்தான் ஹீரோ பார்ட். பெண் வேடங்களில் நடிப்பதற்குத் தகுந்த பையன்களும் இருந்தார்கள்.

அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் கொம்பங்குளம் ஊரில் மட்டுமின்றி பக்கத்து ஊர்களிலும் நல்ல பெயர் கிட்டிருந்தது. அவன் நிரந்தரமாக நாடகக்குழு ஒன்று அமைத்து, ஊர் ஊராகச் சென்று புகழ் சேர்க்க வேண்டும் என்று ஆசை வளர்த்தான். நண்பர்களும் தூபம் போட்டார்கள்.

அவ்வாறு நாடகங்கள் நடத்தி 'ஃபேமஸ் ஆனப்புறம்' சினிமா உலகில் புகுந்து பிரகாசிக்க வேண்டும் என்றும் சிங்காரவேலு எண்ணம் வளர்த்தான்.

'அது நடக்காமலா போகும் அண்ணாச்சி? எதுக்கும் ஒரு டைம் வரணும். நீங்க பிரமாதமா நடிக்கிறீங்க. அருமையா வசனம் பேசுறிங்க. நீங்களே கதை - வசனம் எல்லாம் எழுதி ஜமாய்க்கிறீங்க. சினிமாத் துறையிலே நீங்க கண்டிப்பா ஒரு ஸ்டார் ஆக ஜொலிப்பீங்க' என்று அவனுடைய நண்பர்கள் 'குழை அடித்து' அவனது கிறக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அவன் ஒரு ஹீரோ போலவே நடந்து கொண்டான். தலைவாரிக் கொள்கிற ஸ்டைல், பார்வை எறிகிற தினுசு, நடக்கிற தோரணை, டிரஸ் பண்ணிக் கொள்கிற நேர்த்தி முதலிய அனைத்திலும் நாடகமேடைத்தனமும் சினிமாத்தனமும் மின்வெட்டின. - -