பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 வல்லிக்கண்னன் கதைகள்

சுயம்புவுக்குப் பகீரென்றது. அடிப்பாவி! பழிகாரி என்ன துணிச்சல்! என்றது மனம். "பொய்! சுத்தப் பொய்" என்று கத்தினான். -

"தெரியும்டா நீ பெரிய யோக்கியன்! உன்னை மாதிரி ஆசாமிகதான் என்னென்னவோ பண்றானுக!" என்று சுயம்புவை நெருங்கினான் முரடன்.

"என் பேக்லேயிருந்த ருபா நோட்டைக் காணோம். அதை இங்கே வச்சிட்டு உள்ளாற டைம் பார்க்கப் போனேன். இவன் பையைத் திறந்து நோட்டை எடுத்திருக்கான். பக்கத்திலே வந்து கேட்கிறப்போ என் கையைப் புடிக்கிறான்!” என்று பழி சுமத்தினாள் அவள்.

"அப்படியாடா நாயே?" என்று சுயம்புவின் சட்டையை இறுகப் பிடித்தான் முரடன்.

சுயம்பு அரண்டு போனான்; பாவம்.

"இல்லே. அப்படி எதுவும் நடக்கலே" என்றான். அவனுக்கு தொண்டை அடைத்தது. பேச்சு சரியாக எழவில்லை.

"பொறுக்கி! பொம்பளை பொறுக்கி!” என உறுமி அவனை உலுக்கினான் முரடன்.

"அவன் முழிச்ச முழியே அதைக் காட்டுச்சே!" என்றாள் அவள்.

முரடன் அவன் சட்டைப் பைக்குள் கைவிட்டான். ஒரு கவர் கிடைத்தது. எடுத்துப் பார்த்தான். இருபது ரூபாய் இருந்தது. ஒரு பத்து ரூபாய் தாளும், இரண்டு ஐந்து' ரூபாய் தாள்களும்.

"இது என் பணம்" என்றான் சுயம்பு.

"சரிதாம் போடா!" என்று அவனைப் பிடித்துத் தள்ளினான் முரடன். “ஊளையிடாம இடத்தை காலி பண்ணு. வாயைத் திறந்தயோ உனக்குத்தான் டேஞ்சர். இவளைக் கற்பழிக்க முயன்றேன்னு போலிஸ்லே புடிச்சுக் கொடுப்பேன்’ என்றான்.

சுயம்புவின் பயம் அதிகரித்தது. அவன் கீழே விழாமல் சமாளித்து நின்றதே பெரிது. அழுகை வேறு வந்தது. சே, எவ்வளவு அவமானம். இது போதும்; மேலும் அவமானம் சம்பாதிக்க வேண்டாம் என்று எண்ணியபடி நடந்தான்.

அவளும் தடியனும் கூட்டாளிகள்னு தோணுது என்றது அவள் மனம்.

- எப்படி இருந்தால் நமக்கென்ன! நம்ம பணம் போச்சு. மானமும் போச்சு!