பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு காதல் கதை! 97

எப்படியாப்பட்ட அழகு? என்ற நினைப்பு தானாவே என் மனசில் தலை தூக்கியது. நான் என்ன செய்யட்டும்? எனது மனம் வெறிக் குரங்கு ஒரு கணம் கூட சும்மா இருக்க முடியாதே அதனால்!

என் சந்தேகத்தை ஒடுக்க முயலுவதைப்போல பதுமை பேசியது.

'அவளைப் பார்த்தால் இன்னிக்கு பூரா பார்த்துக்கொண்டே இருக்கலாம்னு தோணும். அவள் நடந்து போகிறபோது, மின்னல்கொடி துவளுவதுபோலிருக்கும். அவள் ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கண்களை தாழ்த்திக் கொள்கிறபோது, கண்ணாடிமேலே சூரிய ஒளி பட்டுத் தெறிக்கிற மாதிரி பளிச்சென்று இருக்கும். அலைகள் நடனமிடும் சமுத்திரத்திலே நிலவொளி படரும் வனப்பு, தோட்டத்துச் செடிகளில் விதம் விதமான மலர்கள் பூத்துச் சிரிக்கும் கோலம், அந்தி வேளையின் மேலவானத்து அதிசய அழகு, வெண் மேகங்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நீல வானம் - இதெல்லாம் ஒரு தடவைக்கு ஒரு தடவை, பார்க்கப் பார்க்க புதுமையும் இனிமையும் வாடாத எழிலும் பெற்றிருப்பதாகத் தோன்றவில்லையா? அதேபோல் தான் ஆனந்தவல்லியும் அழகாய் அதிசயமாய், இனிமையும் இளமையும் நிறைந்த இன்பமாய்க் காட்சி தந்து கொண் டிருந்தாள்.

"பையன் சந்திரன் அவள் மீது ஆசை வைத்து அவள் நினைவாகவே அலைந்து திரிந்தது ஒரு அதிசயம் இல்லைதான். அந்த இளம் பெண்ணைக் காணக்கூடிய எந்த வாலிபனும் அவள்மீது மோகம் கொள்ளாமலிருக்க முடியாது. அவள் பார்த்தால், காணக் கிடைக்காத இன்பத்தையெல்லாம் இருவிழிக் கிண்ணங்களில் அள்ளி எடுத்து இந்தா என்று தருவதுபோல் இருக்கும். அவள் சிரித்தால் அபூர்வமான ஒளி உதயங்களைப் பிடித்துக் காட்டுவது போல தோன்றும். அவள் பேசினாலோ, இன்பக் கதைகளை - இன் சுவை கீதங்களை எல்லாம் இசைப்பதுபோல் படும். அவளை அடிக்கடி பார்க்கவும், அவளால் அடிக்கடி பார்க்கப்படவும், அவளது பொன்னொளிச் சிரிப்பைப் பெறவும், அவளுடைய இனிய பேச்சுக்கள்ைக் கேட்கவும் வாய்ப்பு மிகுதியாகப் பெற்றிருந்தவன் சந்திரன். அவன் அவளின் நினைப்பில் சொக்கிக் கிடந்ததில் வியப்புக்கு இடம் ஏது?..)

ஏது ஏது, இந்தப் பொம்மை சரியான பிசாசுப் பயல் பிள்ளையாக இருக்கும் போல் தோணுதே! என்று என் மனக்குறளி வியப்புக்குரல் கொடுத்தது.