பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

143

வீட்டில் தங்கி இருக்கலாம் என்றும் அதற்குள் சமாதானம் ஏற்படாமல் போனால், அவள் வெளியேற வேண்டும் என்றும் தீர்மானம் ஆயிற்று.

இந்தப் பின்னணியில், அதோ அந்த மறுமுனை கூண்டில் இருக்கும் மார்த்தாண்டன், வீட்டிற்கு வருகிறான். பிளாஸ்டிக் காகிதத்தில் முத்து முத்தான எழுத்துக்கள், வெளியே தெரியும்படி தூக்கி பிடித்து கொண்டு வருகிறான். இவளிடம் அதை நீட்டியபடியே, அவளது கணவன் அவற்றை வீட்டில் கொடுத்து விடும்படி சொன்னதாகச் சொல்கிறான். அவை டி.டி.பி. அலங்கரித்த காகிதங்கள் என்பதை கண்டு கொண்ட சந்திரா, அவனிடம் விவரம் கேட்கிறாள். உடனே இவன், மூன்று பணக்கார நண்பர்களோடு இரண்டு கிரவுண்டு இடத்தில் ஒரு கிரவுண்டு கட்டிட வளாகத்திற்குள் நகலகம், மின்னச்சு, ஃபாக்ஸ், பி.சி.ஒ. எஸ்.டி.டி. ஐ.எஸ்.டி, கம்ப்யூட்டர் இன்டர்நெட் பயிற்சி போன்றவற்றை நடத்துவதாகச் சொல்கிறான். உடனே, அவள், தான், டி.டி.பி. பயிற்சியில் சேர முடியுமா என்கிறாள். மாமியார் அவளுக்கு பணம் கொடுக்க முன்வருவதையும் நினைத்துக் கொள்கிறாள். மார்த்தாண்டமும் 'மூன்றுமாதம் மூவாயிரம் ரூபாய்' என்று கூறுகிறான்.

இந்த கட்டியங்கார நிகழ்ச்சியை அடுத்து அந்த "கொலைக் காட்சி" நினைவுக்கு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மேகத்திரள்... நண்பகலை இரவாக்கிய வேளை... கணிப்பொறிப் பயிற்சி பெற்று அந்த நிறுவனத்திலேயே வேலையில் சேர்ந்த சந்திரா உழைக்கும் மகளிர் விடுதியில் சேர்வதற்காக மாடிக்கு வந்து மர பீரோவுக்குள் இருந்த புடவை வகையறாக்களை அடுக்கி விட்டு, தனது கல்லூரி சான்றிதழ்களை உள்ளடக்கிய கோப்பைத் தேடுகிறாள். கீழே மாமியார் வாய்விட்டு அழுவதை அவளால் தாங்க முடியவில்லை. தாயினும் இனிய அவளோடு இருப்பதற்காக கணவனோடு ஏதாவது ஒரு வகையில் இணைந்து கொள்ளலாமா என்றும் தடுமாறுகிறாள். கீழே நாத்தினார் அம்மாவைத் திட்டுவது அவளுக்குக் கேட்கிறது. "உன் மருமகள் இந்த வீட்டை விட்டுப் போவதை நீ தடுத்தால் உன் மகள் போய்விடுவாள்" என்று கத்துவது காதை அடைக்கிறது. சந்திராவின் மனம் இறுகிப் போகிறது. சான்றிதழ் கோப்பு கைவசப்படுகிறது.

அப்போது பார்த்து, அறைக்கதவின் மின்சார மணி ஒலிக்கிறது. அதற்கு தாள நயமாய் வாசற்கதவும் தட்டப்படுகிறது. அவள் திரும்பிப் பார்த்தாள். இந்த மார்த்தாண்டன் அவசர அவசரமாக உள்ளே வருகிறான்.

"தலை போகிற அவசரம் அதனாலதான் வந்தேம்மா... விமலா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/157&oldid=1134597" இலிருந்து மீள்விக்கப்பட்டது