பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

3


உனக்கு பேரன் மாதிரியும். நீ எனக்குப் பாட்டி மாதிரியும் தோணுது... நீ டிரஸ் பண்ணலியாம்மா?..."

மல்லிகா சிரித்துக்கொண்டே சொன்னாள் - "நீங்களும் பண்ணவில்லையா 'அம்மா'ன்னு பிரித்துச் சொல்லுங்க. இல்லன்னா..."

"சரி, போகட்டும்... உங்கம்மா குளித்து... நீ குளித்து... நான் குளித்து, புறப்படும் முன்னால. அங்கே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தைகூட பிறந்துடும்! நாம் குழந்தையோட காதுகுத்து விசேடத்துக்குத்தான் போகமுடியும். இன்னுமா குளிக்கிறாள்..? குளித்து முடித்துட்டு ஏதோ பால்கணக்கு போடுறாள்னு நினைக்கேன்..."

மல்லிகா சிரித்துக்கொண்டே ஏதோ சொல்லப் போனபோது, பார்வதி கொண்டையை ஒரு வெள்ளைத் துண்டால் கட்டிக்கொண்டு. மார்புக்கு மேலே சேலையைச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள். கணவனைக் கண்டுகொள்ளாமலே, "மல்லி... நீ போய் குளிம்மா" என்றாள்.

"நான் அப்புறமா குளிக்கேன்."

"கல்யாணத்துக்கு நேரமாகுது."

"நான் வரல... தல வலிக்குது."

சொக்கலிங்கம் பதறினார். "உனக்கு வயது வளர்ந்த அளவுக்கு மூளை ஏன் வளரல...? சொந்த அக்காவோட கல்யாணம். நீ வராட்டால் நல்லா இருக்குமா. நாலு பேரு என்ன நினைப்பாங்க."

பார்வதி, அவளைப் பெருமையோடு பார்த்துக்கொண்டே "நீயும் வரணும்மா... இல்லன்னா... நாங்கள்தான் ஒன்னைத் தடுத்துட்டோமுன்னு சொல்வாங்க... உம்... சீக்கிரம்..." என்றாள்.

"முதல்ல அப்பா குளிக்கட்டும்."

"உங்க அப்பா குளிக்குறதும், குளிக்காததும் நேரத்தைப் பொறுத்து இருக்கு. நேரம் ஆயிட்டுதுன்னா, அவரு வழக்கமா வர்றது மாதிரி குளிக்காமலே வந்துடுவார். அப்படியே குளிச்சாலும், பழையபடி அரவை மிஷின்ல புரளத்தான் போறாரு..."

"நான் மிஷின்ல புரளாட்டா - நீ தங்க நகையில புரள முடியாதுடி! பார்த்துப் பேசு. பிடிச்சாலும் பிடிச்சேன் புளியமரமாப் பிடிச்சேன்னு சொன்னவள். நீதான் - மறந்துடாதே."

"நான் மறக்கல... புளியமரம் குளிக்காது - மழையிலதான் நனையும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/17&oldid=1133660" இலிருந்து மீள்விக்கப்பட்டது