பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

11

பெருமாளின் பூர்வீகக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உறவுமுறைச் சங்கம் என்று ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். பணக்காரர்கள் ஆட்டிப் படைக்கும் இந்தச் சங்கத்தில், ஏழைகள் வீட்டுத் திருமணங்களில், சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கியாக வேண்டும். இது, ஒரு கட்டாய 'இன்வைட்டேஷன்'. இல்லையானால், அந்த ஏழைகள், தள்ளி வைக்கப்பட்டு விடுவார்கள்.

நிர்வாகிகள், ஆளுக்கொரு வார்த்தை பேசுவதில், அதுவும் வாழ்த்திப் பேசுவதில் என்ன கோளாறு என்று கேட்கலாம். கோளாறே அங்கேதான் இருக்கிறது. முதலாவதாக ஆளுக்கொரு வார்த்தை பேசாமல் 'ஊமைக்கு உளறுவாயன் சண்டப் பிரசண்டன்' என்பதுபோல், ஒவ்வொரு பணக்கார நிர்வாகியும், தன் பவுன்கார மோதிரங்களையும், டெர்லின் சட்டைப் பைகளுக்குள் தெரியும் நூறு ரூபாய் நோட்டுக்களையும், ஏளை பாளைகள் தொடாமலே பார்க்கவேண்டும் என்பதுபோல், அரைமணிநேரமாவது பேசுவார். இந்த அரைமணிக்குள். "அதாவது. அதாவது" என்ற வார்த்தை மட்டும் ஆயிரந்தடவை வரும். இரண்டாவதாக, பணக்காரர்கள் மட்டும்தான் நிர்வாகிகளாக இருப்பதா என்று பேச்சு வந்தபோது, அந்த தந்திரக்கார பணக்காரப் புள்ளிகள், 'போர்ட் ஆப் ரெவின்யூ' என்பது மாதிரி, வருவாய்க் குழு, மலர்க் குழு, விழாக் குழு, ஒழுங்குக் கட்டுப்பாட்டுக் குழு என்று குழு குழுவாய்ப் போட்டு, சில வாயாடி ஏழைகளை அவற்றில் நிரப்பிவிட்டார்கள்.

இப்படி அந்த வ.கு.உ. (வருவாய்க் குழு உறுப்பினர் - இப்படித்தான் அழைப்பிதழில் போட்டிருந்தது. ம.கு.உ. மலர்க் குழு உறுப்பினர் செயலாளர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர், உதவிச் செயலாளர் நிர்வாகச் செயலாளர், தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர். உதவித் தலைவர், நிர்வாகத் தலைவர். பொருளாளர். நிர்வாகப் பொருளாளர், இணைப் பொருளாளர். நிர்வாகப் பொருளாளர் என்று இருபது பேர் பேசி, நேரம் இருந்தால் இன்னும் பத்துப்பேரும் பேசவேண்டும் இவர்கள் பேசி முடிப்பது வரைக்கும் காத்திருப்பது என்றால் மணமக்களுக்கு முதல் இரவு வருவதற்கே மூன்று மாதம் ஆகும்.

மணமக்களை வாழ்த்தி, தலைவரும், இதர நிர்வாகிகளும் பேசிமுடித்த பின்னர் ஒரு வ.கு.உ. பேச எழுந்தார். மணமக்களுக்கு தாங்க முடியாத எரிச்சல். பேசி முடித்தவர்களுக்கும். பேசப் போகிறவர்களுக்கும் அதே எரிச்சல். பேசுகிறவர் மட்டும். எவரையும் கண்டுகொள்ளவில்லை. கூட்டத்தினருக்கோ பசித் தொல்லை. சாப்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/25&oldid=1133669" இலிருந்து மீள்விக்கப்பட்டது