பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வளர்ப்பு மகள்

செல்லம்மாவுக்கு. என்னவோ போலிருந்தது. இருந்தாலும் எங்கே போய் கைகழுவது என்று தெரியாமல் மல்லிகா திகைத்து நின்றபோது. செல்லம்மா, அவளுக்கு அருகே இருந்த அண்டாப் பாத்திரத்தில் நீர் மொண்டு கொடுத்தாள். பிறகு தன் முந்தானையால், மகளின் வாயைத் துடைக்கப் போனாள். மல்லிகா, முகத்தைச் சுழித்துக்கொண்டே ஒதுங்கிக் கொண்டாள்.


4

பந்தி முடிந்து, பெரும்பாலானவர்கள், 'ஐந்தோ பத்தோ' மொய் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். மணமக்களும், பார்வதியும், பெருமாளும், இந்தப் பிள்ளைகளும், அந்த 'முக்கு வீட்டுக்குள்' உட்கார்ந்து இருந்தார்கள்.

சின்ன அறை. சிக்கலான அறை. தட்டுமுட்டுச் சாமான்கள் மறைத்த இடம் போக, மற்ற இடத்தில் மூன்று ஆழ்வார்கள் பாடியதுபோல, அந்த முப்பெரும் ஆழ்வார்களும் உட்கார்ந்து இருந்த திண்ணையைப்போல, "மூவர் நிற்க -இருவர் உட்கார ஒருவர் படுக்கும்படியான" இடம் போதாக்குறைக்கு அன்றைக்கு மழை பலமாகப் பெய்வதுபோல் தோன்றியது. வெளியே படுக்க முடியாது. எல்லோரும் உள்ளேதான் படுக்க வேண்டும். அப்படியானால், முதலிரவை எங்கே வைப்பது? புது ஜோடியை, எந்த இடத்தில் தூங்கச் சொல்வது? மாப்பிள்ளை வீட்டிலும் வைக்கமுடியாது. அங்கேயும் இதே மழை பெய்யும். இதே மாதிரியான சின்ன அறைதான் இதே மாதிரியான குழந்தை குட்டிகள். போதாக்குறைக்கு கிழடு கட்டைகள்.

பெருமாள், மோவாயைப் பிடித்து யோசித்துக்கொண்டு இருந்தார். மூத்த மகளின் திருமணத்தை நடத்திவிட்ட திருப்தி, அந்த முகத்தில் இல்லை. ஒன்றும் இல்லாத அவருக்கு, அவரைப் போலவே ஏழையாய் உள்ள ரத்த உறவு இல்லாத நண்பர்கள். ரேஸ் சகாக்கள், பட்டைச் சாராயப் பங்காளிகள் வந்து ஆயிரம் ரூபாய்க்கு மேலேயே மொய் எழுதியிருக்கிறார்கள். இருந்தும் அவர் மனதில் தெம்போ, திராணியோ இல்லை. அந்தச் சமயத்தில் மட்டும். தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தார்.

எப்படியெல்லாம் வாழ்ந்தேன்! ஒரு வீட்டுக்கு மூன்று வீடு வைத்திருந்தேன். மோட்டார் பைக் ஒட்டினேன். சொந்த மோட்டார்பைக்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/30&oldid=1133676" இலிருந்து மீள்விக்கப்பட்டது