பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

23

சுறுசுறுப்பாய் விளங்கிய மல்லிகாவை தத்தாகக் கேட்டார். தங்கைக்காரியோ, தன் மகளைத் தரமுடியாது என்பதை தயக்கத்தோடு வெளியிட்டபோது, "உன் பிள்ளை என் பிள்ளை இல்லியா? எப்படியோ... ஒருவரை ஒருவர் பாராமல் இருக்கும்படியாய் ஆயிட்டுது. உன் பிள்ளையைப் பார்த்தாவது உன்னைப் பார்க்கிற ஆறுதல், எனக்கு வேண்டாமா" என்று அவர் கேட்டபோது, செல்லம்மாவால், தாள முடியவில்லை. "இவள் பிறக்கதுக்கு முன்னாலேயே நாம ஒருதாய் வயித்துல பிறந்தவங்க அண்ணா" என்று சொல்லிக்கொண்டே மல்லிகாவை, அவரிடம் நீட்டினாள்.

சொக்கலிங்கம், நேராக வீட்டுக்கு வந்து, மனைவியிடம் குழந்தையை நீட்டினார். அப்புறந்தான், அவளுக்கு விஷயமே புரிந்தது. ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தாள். அசந்துபோன அண்ணன்களின் பேச்சைக்கேட்டு, சிலசமயம் குழந்தையை அடித்திருக்கிறாள். சொக்கலிங்கம் குழந்தையைக் கொஞ்சும்போது, பொறாமைகூட ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் குழந்தையின் மேலான சிரிப்பில், கள்ளங்கபடமற்ற கையாட்டும் லாவகத்தில், பார்வதி, தன் எரிச்சலை அடக்குவது தெரியாமலே அடக்கினாள். அந்தக் குழந்தை அவளை, ஒருசமயம் "அம்மா. அம்மா." என்று சொல்லி கன்னத்தைத் தொட்டது, அவள் இதயத்தைத் தொட்டுவிட்டது.

ஒருசமயம், கணவனிடம் ஏதோ மனத்தகராறில், சாப்பாட்டுத் தட்டை முன்னால் வைத்துக்கொண்டே, சாப்பிடவும் முடியாமல், சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல், அவள், கோபத்தாலும், அந்தக் கோபத்தை மீறிய பசியாலும் சுவரில் தலையைத் தேய்த்துக்கொண்டே இருந்தபோது, இந்தக் குழந்தை, தன் வெள்ளரிப் பிஞ்சு விரல்களால், சோற்றை எடுத்து. அவள் வாயில் ஊட்டியபோது, பார்வதியின் வயிறு நிறைந்ததோ இல்லியோ, இதயம் நிறைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, குழந்தை எங்கிருந்து வந்ததோ, அங்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்ற ஆசைக்கு, நிராசை கொடுத்துவிட்டு, இயல்பான தாய்மையினால் உந்தப்பட்டு, மல்லிகாவை, அவள், தாய்க்குத் தாயாக வளர்த்து வருகிறாள்.

சகோதரர்களின் சகவாசத்தால், அவ்வப்போது அவளுக்கு "நான் அனாதையாயிடுவேனோ.. மல்லிகா கைவிட்டுவாளோ" என்கிற எண்ணமும், பீதியும் எட்டிப் பார்த்தனவே அன்றி. இதுவரை, அவை எகிறவில்லை. அப்படியே. அண்ணன்மார்களின் உபதேசத்தால், மல்லிகா கல்யாணம் ஆனதும் மாறினாலும் மாறலாம் என்ற எண்ண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/37&oldid=1133685" இலிருந்து மீள்விக்கப்பட்டது