பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

25

பேசிட்டார்னுதான் வருத்தமாய் இருக்கு. ஏம்மா. படிக்காதவங்களுக்கு நாகரீகமாய் பேச வராதோ..."

"நான் கூடத்தான் படிக்கல. நாகரிகமாய் பேசாமலா இருக்கேன்..."

"நான் படிக்காத ஆண்களைச் சொன்னேன்."

சொக்கலிங்கம் உள்ளே வந்தார்.

"நான் கூடத்தான் படிக்கல. எப்போதாவது அநாகரிகமாகப் பேசியிருக்கேனா? இழவு எடுத்த பயல். பேசினால் பேசிட்டுப் போறான். ஏதாவது பட்டச் சாராயம் போட்டிருப்பான். பன்னாடப் பயல். அவனுக்காவவா இப்படி உட்கார்ந்திருக்கே? பெருமாள் மாதிரி ஆட்களையும் அவங்க பேசறதையும், நாம அவங்களை மனுஷனாய் எண்ணி மதிப்புக் கொடுத்தால், அப்புறம் நாம எண்ணுறதெல்லாம் மனுஷத்தனமாய் இருக்காது விடு கழுதையை.. சீக்கிரமா புறப்படு.. நானும் நுங்கம்பாக்கம்வரை ஆட்டோவுல வரணும்... உம் புறப்படும்மா. நான் மட்டும் அவன் பேசும்போது இருந்திருக்கணும்... சரி.. ஜல்தியாய் புறப்படும்மா.."

அந்த 'ஆளை' மனதில் இருந்து கட்டாயமாக விலக்கிக் கொண்டே, மல்லிகா புறப்பட ஆயத்தமானாள். புடவையை எடுப்பதற்காக அவள் பீரோவைத் திறந்தபோது, சொக்கலிங்கமும் வெளியே வந்தார்.

சொக்கலிங்கமும் மல்லிகாவும், ஆட்டோவில் ஏறியபோது பார்வதியின் அண்ணன், அந்த ஆட்டோவை வழிமறிப்பது மாதிரி வந்து நின்றுவிட்டு, பிறகு "காலேஜூக்கா... இல்ல செட்டியார் வீட்டுக்கா... எப்படியோ. நீங்க காலேஜூக்கும், மல்லிகா செட்டியார் வீட்டுக்கும் தெரியாமல் போயிடப்படாது. டிரைவர், யார் யார் எங்கு இறங்கணும் என்கிறதை ஞாபகப் படுத்துங்க..." என்று சொல்லிக்கொண்டே வாசல் படிக்கட்டில் கால் வைத்தார்.

வாசலில் நின்ற பார்வதி, "வாங்கண்ணா" என்றாள்.

சொக்கலிங்கம், திடீரென்று. ஆட்டோவில் இருந்து இறங்கி, "நீ போம்மா... நான் செட்டியார் வீட்டுக்குப் போகல... இவரு முகத்துல விழித்த பிறகு எங்கேயும் போகப்படாது. நீகூட ஜாக்கிரதையா போயிட்டுவா" என்று மல்லிகாவுக்கு மட்டும் கேட்கும்படியாக முனங்கிக்கொண்டே, மச்சான்காரரைத் திரும்பிப் பாராமல் நடந்து. அரவை மில்லை நோக்கிப் போனார். காலங்காத்தால... என்னடா சாமி இது... யாரை வேணுமுன்னாலும் அனுப்பு... ஆனால் இவரை மட்டும் அனுப்பாத...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/39&oldid=1133687" இலிருந்து மீள்விக்கப்பட்டது