பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வளர்ப்பு மகள்

மல்லிகாவுக்கு என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை.

திடீரென்று பார்வதியைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். அவள் இவளை விலக்க முடியாதபடி கெட்டியாகப் பிடித்துக்கொண்டு. அவள் மார்பில் தலைசாய்த்துக் கொண்டு புரண்டு, "என்னை அங்கே அனுப்பிடாதிங்கம்மா... அனுப்பாதிங்க... அம்மா அம்மா" என்று அரற்றினாள். விம்மினாள்.

பார்வதிக்கு என்னவோ போலிருந்தது. அவள் தாய்மைப் 'பேறு' அடையவில்லையானாலும், இப்போது அது பெயர் சொல்லும்படி, விழித்துக்கொண்டது. மல்லிகாவின் தலைமுடியைக் கோதிவிட்டுக் கொண்டே, "அழாதடி... நானிருக்கையில் ஏண்டி அழுவுறே? ராமன் உனக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான்..." என்றாள்.

இப்போதும் மல்லிகா அழுதாள். 'என்னை ராமன்கிட்ட, அனுப்புறதை விட, 'அவங்க' வீட்டுக்கே அனுப்பிடுங்கம்மா' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே, வெளியே மறுமொழி கூறாமல் தனக்குள்ளேயே அழுதாள்.


10

கல்லூரி மாணவ-மாணவிகள் அந்த அறையில் கூடிவிட்டார்கள்.

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி அங்கே நடைபெறப் போகிறது.

சரவணன் பேச்சில் அப்படியொரு மயக்கம் ஏற்படும். அதில் சொல்லோசை இருக்காது. மொழியடுக்கு இருக்காது. ஏற்ற இறக்கம் இருக்காது. எதுவுமே இல்லாதது போலத் தோன்றும். அதேசமயம் எல்லாம் இருப்பதுபோல் தோன்றும். எளிய சாதாரண வார்த்தைகள், இயல்பான குரல், கைகளை நீட்டி முழக்காத நளினம், யாரோ நெருங்கிய சிநேகிதர் ஒருவர் நம்மிடம் மனம்விட்டுப் பேசுவது போன்ற பாணி. இதயமே வாயாக வந்திருப்பது போன்ற நேர்த்தி-பரிசுக்காக பரபரப்படையாத இயல்புத்தன்மை. இத்தனையும் நிறைந்த அவனுக்கு, முதற்பரிசு கிடைக்கும் என்பது முடிவான விஷயம். ஆனாலும் அவன் பேசுவதைக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்துடனும், ஒருசில வண்ணப் பூச்சிகள் மேடையில் நாக்காடுவதைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் பெருந்திரளாகக் குழுமினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/60&oldid=1133719" இலிருந்து மீள்விக்கப்பட்டது