பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வளர்ப்பு மகள்

மல்லிகா, கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, "நீங்கள் அப்பா மேல வழக்குப் போடுறதா இருந்தால், நான் உங்களோட வரமாட்டேன் வரமாட்டேன்" என்று குழந்தைபோல் விம்மினாள்.

பெருமாள், தான் பெற்ற மகளை பெருமிதத்தோடும் பாசத்தோடும் பார்த்துவிட்டு, அவள் முதுகில் தட்டினார். பிறகு "பிச்சைக்காரப் பயலுவ காசு, நமக்கெதுக்கும்மா" என்று சொன்னார். அதற்கு அவள், "அப்பாவை அப்படியெல்லாம் திட்டப்படாது" என்று கலங்கியவாறே சொன்னபோது, பெருமாள் குழந்தையானார். குலுங்கி அழுதார்.

"இன்னாய்யா... நீ குயந்த மாதிரி, அழலாமா? சரியான ஆளய்யா" என்று சொல்லிக்கொண்டே, ரிக்ஷாக்காரரும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ரிக்ஷா நகர்ந்தது. பதினாறு ஆண்டு காலமாக அவள் பார்த்து உணர்ந்து உய்த்த இடத்தைவிட்டு நகர்ந்தது. ரிக்ஷா சக்கரங்கள் சுழலச் சுழல, பார்வதியின் தலையும் அதேவேகத்தில் சுழன்றது.


14

கணவன், அண்ணனை எதுவும் செய்துவிடப் போகிறாரோ என்று கண்கலங்க, வாசல் திண்ணையைப் பிடித்துக்கொண்டு நின்ற செல்லம்மாவுக்கு, மனம் மரண அவஸ்தைப் பட்டாலும், லேசான ஆறுதல். அண்ணனைச் சுற்றி எப்போதும் ஆள் இருக்கும். இவரால் அடிக்க முடியாது. அதோடு இவ்வளவு ரவுடித்தனம் செய்யும் இவரும், அண்ணனைக் கண்டதுமே, பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போகிறவர். ஒருவேளை, இவர் கலாட்டா செய்து, இவரையே, அண்ணன் போலீசில் பிடித்துக் கொடுத்து... இருக்காது... இருக்காது... என் அண்ணனைப் பற்றி எனக்குத் தெரியும். அடிப்பதற்கு முதுகைக் காட்டினாலும் காட்டுவாரே தவிர, முதுகில் குத்த மாட்டார். ஒருவேளை, அண்ணன் இல்லாமல். வேறு யாராவது இருந்து... அட கடவுளே...

தவித்துக் கொண்டிருந்த செல்லம்மாவுக்கு முதலில் எதிரே வந்து கொண்டிருந்த ரிக்ஷா மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. பிறகு அதிலிருந்த உருவங்களைப் பார்க்கப் பார்க்க ரிக்ஷா மறைந்து, பெருமாளும். மல்லிகாவும் மட்டுமே தெரிந்தார்கள். பின்னர் மல்லிகா மட்டுமே அவள் கண்களில் நிறைந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/76&oldid=1133738" இலிருந்து மீள்விக்கப்பட்டது