பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

65

எதிர்காலத்தை நினைக்க நினைக்க, அவருக்கு, தனக்கு. நிகழ்காலமே இல்லாததுபோல் தோன்றியது. தாங்கமுடியாத இதயச் சுமை. ஒரு கிளாஸ் போட்டுட்டு வரலாமா... ஒரே ஒரு கிளாஸ்... இன்னைக்கு மட்டும்... நாளையில் இருந்து நிறுத்திடலாம்.

லாந்தர் விளக்கு அணைக்கப்பட்டது. அந்த இரவில், மல்லிகாவைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த குடித்தனக்காரர்கள். வெளித்தளத்தில், கணவன் மனைவி சகிதமாய், ரெட்டை ரெட்டையாகவும், பிள்ளைகள் சகிதமாகவும், வரிசை வரிசையாகப் படுத்தார்கள். மல்லிகாவும் படுத்தாள். அப்படியே தூங்கிப் போனாள். பட்டு மெத்தை கொடுக்காத சுகத்தை அந்தப் பாய் கொடுத்தது. தப்பு... பாய் கொடுக்கவில்லை. அந்தப் பாயை விரித்த ஜீவன்களின் பாசம் கொடுத்தது.

நள்ளிரவு.

குடித்தனக்காரர்களின் குழந்தைகளில் ஒன்றோ, இரண்டோ ஒப்பாரி போட்டபோது, திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்தாள் மல்லிகா கட்டில் மெத்தையில் படுத்திருப்பதாக நினைத்து எழுந்தவள். பாயைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அன்றைய தினம் நடந்தவை அனைத்தும், உறக்கம் கலைந்து ஒரு கணம் நிர்மலமாக இருந்த அவள் மனதில், உலுக்கிக்கொண்டே வந்து உட்கார்ந்தது. தலையில் இருந்த வந்ததா, வயிற்றில் இருந்து வந்ததா என்று வந்த இடம் தெரியாத அந்த சுமை நிகழ்ச்சிகளின் - அனலான நெருப்புக் கட்டிகள் அவள் இதயத்தில் சட்டென்று பட்டு, சரியாகப் பிடித்துக்கொண்டது.

மல்லிகா, அம்மா பார்வதியை நினைத்தபோது, முடங்கிக் கிடந்த செல்லம்மாவின் முகமே தெரிந்தது. அப்பா சொக்கலிங்கத்திற்குப் பதிலாக, பெருமாள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவளுக்கு. தியாகராய நகரில் இருக்கும் அப்பாவையும், அம்மாவையும் உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. அவர்கள் கால்களைக் கட்டிக்கொண்டு கதறவேண்டும் போலவும், அவர்கள். இவள் தலையை ஆதரவாகக் கோதிவிட வேண்டும் என்பது போலவும் துடித்தாள். எதையும் எதிர்பார்க்காத பாசத்தின் உச்சகட்டத்திற்கு வந்தவளாய், அவள் செல்லம்மாவை எழுப்பினாள்.

கண்ணைக் கசக்கிக்கொண்டே எழுந்த செல்லம்மா என்னம்மா என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/79&oldid=1133741" இலிருந்து மீள்விக்கப்பட்டது