பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

77

எந்த வேகத்தில் வாய்ச் சண்டை போடுகிறார்களோ, அந்த வேகத்திலேயே உடனடியாய் கூடிக்கொள்ளும் குடித்தனக்காரர்களையும், குடித்துவிட்டு உதைக்கும் ஆம்புடையான்களுக்கு கால் பிடித்துவிடும் பெண்களையும் பார்க்கப் பார்க்க, அவளுக்கு. புதியதோர் உலகைக் கண்டுவிட்ட உவகை ஏற்படத் துவங்கியது. ஆனால், இந்த வீட்டுக்கார அம்மாவின் போக்குதான் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில், மல்லிகாவை மாடிக்கு வரவழைத்து பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பாள். ஒருநாள், மல்லிகாவிற்கு ஆர்லிசைக் கலந்து கொண்டே "இந்த வீட்டுல இருக்கறது எல்லாம் பீடைங்க. அதுங்ககிட்ட எதையும் வச்சுக்காதே" என்றாள்.

என்றாலும் மறுநாளே, மல்லிகா அந்த பீடைங்களுக்கு எழுத்தறிவைப் புகட்டுவதைப் பார்த்ததும், அவள், மல்லிகாவுடன் பேசுவதை அடியோடு நிறுத்திக் கொண்டாள். அப்புறம் அவளைப் பார்த்து, முணுமுணுக்கத் துவங்கினாள். எதிர்க் கேள்வி போட முடியாத முணுமுணுப்பு. தான் ஒருத்திதான் பெண் என்கிற அகங்கார முணுமுணுப்பு. இது போதாதென்று. அவள் தம்பி ஒருவன் பெயர் ரமணனாம். இருபத்தோறு வயது முண்டம். டுட்டோரியல் காலேஜில் படிக்கிறானாம். மாடியில் நின்றுகொண்டே, மல்லிகாவைப் பார்த்த பார்வை, பாதகப் பார்வை. வயதுக்கேற்ற பார்வை என்றால் தொலைந்து போகிறான் என்று விட்டுவிடலாம். மல்லிகாகூட விட்டிருப்பாள். ஆனால், அவன் பார்வையோ, அவள் குடியிருக்கும் வீடு எப்படிச் சொந்தமோ, அதுபோல் அவளும் தனக்குச் சொந்தம் என்பதுபோல் பார்க்கும் பழைய காலத்து ஜமீன் பார்வை. அற்பத்தனமான அவனது உரிமைப் பார்வையை, அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

அன்றும் அப்படித்தான்.

சேலையை மார்புவரைக்கும் கட்டிக்கொண்டு, வீட்டின் ஒரு மூலையில் இருந்த குழாய்க்கருகே, மல்லிகா குளித்துக் கொண்டிருந்தாள். ஒரு ஈயப் பாத்திரத்தில் பாதி தண்ணீர் இருந்தது. அவள் அக்காள் சந்திரா. குழாயருகே போய் ஒரு தவலைப் பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கப் போனாள்.

மாடியில் ரமணன் உருட்டுக் கண்களோடு, மல்லிகாவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையைத் தடுக்க முடியாத ஆதங்கத்தில், தனது உடம்பைத்தான் மறைக்க முடியாது. முகத்தையாவது மறைக்கலாம் என்று நினைத்தவள்போல், மல்லிகா ஈயப்பாத்திரத்தில் இருந்த தண்ணீரைத் தலையில் ஊற்றி காலியாக்கிவிட்டு, கண்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/91&oldid=1133784" இலிருந்து மீள்விக்கப்பட்டது