பக்கம்:வள்ளலாரும் அருட்பாவும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


வள்ளலார் அந்தப் பாரம்பரிய மரபை விட்டுச் சிறிதும் விலகவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். இனி நமது சிந்தனைக்கு ஒரு கேள்வி. வாழையடி வாழையாக வந்த இத்தனை பேரும் ஏன் திருவடியையே நினைந்து அதனையே பற்றிப் போற்றியிருக்கிறார்கள்? ஏன் தலையை, முகத்தை முடியை, மார்பை, கைகளைச் சொல்லவில்லை. சிந்தித்தால் ஒரு உண்மை புலப்படுகிறது; தலையை முகத்தைப் பார்த்தால் சிவன், விஷ்ணு, பிரமா, முருகன், விநாயகன், ஏசு, புத்தர் எனத் தெய்வங்களின் வேற்றுமைகள் புலப்பட்டுவிடுமாம்! திருவடி ஒன்றையே பார்த்து வணங்குவதால் எ வ் வி த வேற்றுமையும் தோன்றாது. யாருடைய திருவடி என்றும் தெரியாது. ஏன் இன்னும் ஒருபடி தாண்டிச் சிந்திக்கலாம், திருவடி களை மட்டும் பார்த்து வணங்கும் பொழுது அது ஆண் திருவடியா? பெண் திருவடியா? என்றும் தோன்றாது. எப்படி இந்த வேற்றுமையற்ற வணக்கம்? வள்ளலார் கண்ட சமரச சன்மார்க்கம் இதுவே என்றாகிறது. இதுவும் திருமூலர் மரபிலிருந்து மாறவில்லை என்பதையே நமக்குக் காட்டுகிறது. 3. சாதி சமய பேதமில்லாமை "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது ஏறத்தாழ 3000 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த தமிழ்ப் பெருமகன் திருமூலரின் வாக்கு. இதையே பின்பற்றி, இதற்கு ஒரு விளக்கம் கூறுவது போல, வள்ளலார் தன் அருட்பாவில் "ஒன்றே சிவமென்று உணர்ந்து இவ்வுலகமெலாம் நன்றே நடுமையுற்று நண்ணியே' எனப் பாடியிருக்கிறார். இது உலக மக்களின் ஒருமைப்பாடு. வள்ளலார் இதற்கு 'ஆன்ம - நேய ஒருமைப்பாடு' எனப் பெயரிட்டிருக்கிறார்.