பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

போல வாழ்வு, இது, உன் நீதி! அப்படித்தானே! அம்பிகே! சொர்ணாம்பிகா! சுந்தர சொர்ணாம்பிகா! பேசமாட்டாய்—இன்னமும் பேச மறுக்கிறாய்—இந்தக் கரங்களும் இனிச்சும்மா இருக்காது! ஆமாம்—சுக்கு நூறாக்கப் போகிறேன் உன்னை—உடைத்து எறியப்போகிறேன் இப்போது—இதோ இப்போது......என்றெல்லாம் பேசினேன்—கேள்விகளைப் பூட்டினேன்—மாரி பதில் பேசவில்லை—இன்றாவது பதில் உண்டா கேளுங்கள்—கிடையாது! மாரிக்காக வந்திருக்கும் இந்த மன்னார்சாமியாவது பதில் கூறட்டும் பார்ப்போம்.

நீதி: மாரி! இவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறாதது உண்மைதானா?

மாரி: ஆமாம்! என்ன கூறுவதென்பதே தெரியவில்லையே.

நீதி: சில்ஹாட்! உனக்கு வக்கீல் இல்லையே?

சி: இல்லை. தேவையுமில்லை. என் வழக்கு எப்படி முடியுமோ என்ற கவலை எனக்கில்லை. எனக்குச் சட்டங்களிலே சந்து பொந்துகள் தேடித் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமில்லை. என் வழக்கை நானே நடத்திக்கொள்வேன். என் கேள்விகள் நியாயமானவை என்பதை நிரூபிக்கிறேன், உத்தரவு தந்தால்.

நீதி: சரி!

சி: மாரி! உன்னை என்போன்ற பலர் பூஜித்து வருவது உண்மைதானே?

மாரி: ஆமாம்.

சி: ஏன் பூஜிக்கிறார்கள்?

மாரி: எனக்குத் தெரியாது.

சி: பூஜிக்கும்போது, என்னென்ன கூறி பூஜிக்கிறார்கள்?