73
உமா: ஆமாம்—பல்வேறு ஊர்களிலிருந்து—மோட்டரிலும் ரயிலிலும்......
ஏகா: ஊரே திரண்டுவிட்டதல்லவா?
உமா: ஆமாம்—ஆடவரும் பெண்டிரும்—குழந்தைகளும் வயோதிகரும்—பாமரரும் படித்தவர்களும், பட்டிக்காடுகளும் பட்டணவாசிகளும், சகலரும் திரண்டு வந்தனர்......
ஏகா:—வந்தனால்லவா......!
உமா: வந்தனர் — வந்தனர் — பன்னிப் பன்னிக் கேட்கிறீரே இதனை......
ஏகா: காரணமின்றி அல்ல நான் கேட்பது. இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வந்தனர்—எதற்கு...?
உமா: விளையாடுகிறீரா! எதற்கு! இது ஒரு கேள்வியா? எதற்கு வந்தனர் என்றால், வெள்ளித்தேர் பார்க்க!
ஏகா: இன்னொரு முறை கூறு! கோபியாமல் சொல், கோமளமே! எதற்கு வந்தனர் அவ்வளவு மக்களும்.........?
உமா: வெள்ளித்தேர் பார்க்க!
ஏகா: சரியாகச் சொன்னாய் பார்வதி! உண்மையை உரைத்தாய்! வெள்ளித்தேர் பார்க்க வந்தனர், லட்சக் கணக்கான மக்கள்—உன்னையும் என்னையும் பார்க்க அல்ல—நம்மைத் தரிசிக்க அல்ல—நமக்குப் பூஜை செய்ய வரவில்லை—வெள்ளித்தேர் பார்க்கவே வந்தனர்! பார்வதி! வெட்கமும் துக்கமுமின்றிக் கூறுகிறாயே, வெள்ளித்தேர் பார்க்க வந்தனர் என்று! நம்மைப் பார்க்க வரவில்லை!! இலட்சக் கணக்கான மக்களைப் பக்தகோடிகளை, நீ, விவரித்தபடி, பலரகமான மக்களை, திரட்டிக்கொண்டு வரும் மகிமை, சக்தி, நமக்கு இல்லை! கேவலம், வெள்ளித்தேர் கொண்டுவந்து சேர்த்தது இவ்வளவு பெருந்திரளான மக்களை! கைலைவாசி, திரிபுராந்த-