74
கன், கபாலி, பிறை சூடி, என்றெல்லாம் எனக்குச் சிறப்புப் பெயர்கள் பல உள! தோடுடைய செவியன்! தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி! என்றெல்லாம் கவிதாவடிவிலே, பல பட்டங்கள் உள்ளன எனக்கு. உனக்கும், உயர்வளிக்கும் பட்டங்கள் பல! எனினும், பிராணநாயகி! நமது பெருமை, மகிமை, போதுமானதாக இல்லை. அவ்வளவு பக்தகோடிகளைத் திரட்டிக் கொண்டுவா! நம்மைப் பற்றி, நால்வர் பாடியுள்ள பாசுரங்கள், புராணிகர்கள் இழைத்துள்ள கதைகள், போதுமானவைகளாக இல்லை, பக்தகோடிகளைக் கூட்டிவர! வெள்ளித்தேர், தேவைப்படுகிறது! வேதனையாக இல்லையா! வேலவன் தாயே! நீயே, கூறினாய், மக்கள் எதற்காகக் கூடினர், என்பதை! வெள்ளித்தேர் பார்க்க வந்தனர்—நம்மைத் தரிசிக்க அல்ல!
உமா: நாதா! எனக்கும் இப்போதுதான் ஓரளவுக்கு விளங்குகிறது.........
ஏகா: உமா! நீயும், அன்று மக்களைப்போலவே, பொழுது போக்கிவிட்டாய்—கொட்டு முழக்கு கேட்டு மெய் மறந்து போனாய்—வாண வேடிக்கையைக் கண்டு வாய் பிளந்து நின்றாய்—சிந்திக்கவில்லை—பக்த கோடிகள் பேசிக்கொண்டதையும், கேட்கவில்லை. கேட்டிருந்தால், நான் அடக்கிக்கொண்டதைப்போல, உன்னால் ஆத்திரத்தையும் அழுகையையும் அடக்கிக்கொண்டிருந்திருக்க முடியாது.
உமா: என்ன பேசினார்கள் பிராணபதே!
ஏகா: என்ன பேசினார்களா! எல்லாம் பேசினார்கள்—நம்மைப்பற்றி மட்டுந்தான், ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தபோதெல்லாம், அந்த ஜனங்கள், வெள்ளித்தேர் எந்தத் தெருவில் இருக்கிறது—இந்த வீதிக்கு வெள்ளித்தேர் வர, எவ்வளவு நேரம் பிடிக்-