பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

கும்—வெள்ளித்தேர், எத்தனை மணிக்குக் கிளம்பிற்று—எத்தனை மணிக்குக் கோயில் போய்ச் சேரும்—என்று, வெள்ளித்தேர், வெள்ளித்தேர் என்று ஓயாமல் பேசினரேயொழிய, நம்மைப்பற்றிச் சிந்திக்கவே இல்லை. வெள்ளித் தேருக்குத்தான், சகல மரியாதையும், வெள்ளித்தேரின் மீதுதான்—இறைவன் வீற்றிருக்கிறானே தேவியுடன் என்று எண்ணினரோ? இல்லை! இறைவனைப்பற்றி அறவே மறந்தனர். வெள்ளித்தேர், எவ்வளவு செலவுசெய்து கட்டினார்கள்? எவ்வளவு வசூலாயிற்று! யார் வசூலித்தார்கள்? எங்கெங்கு சென்று வசூலித்தனர்? என்று கேள்விச் சரங்கள் பூட்டுவோரும், “சொல்லுகிறார்கள் நாலு இலட்சம் என்று யார் கண்டார்கள்—” என்று ஒரு சந்தேகப் பேர்வழி கூற, சளைக்காத சைவ மெய்யன்பர், சரியான கணக்கு—சத்யமான கணக்கு என்று வாதாட, சமரசப் பிரியர், செலவு கிடக்கட்டும், கணக்குச் சரியா தவறா என்பதுகூடக் கிடக்கட்டும். வேலைப்பாடு நேர்த்தியாக இருக்கிறது என்று பேச—இப்படி, பேச்செல்லாம் வெள்ளித்தேர் பற்றியதாக இருந்ததேயொழிய, நமது மகிமையைப்பற்றி ஏதும் பேசவே இல்லை. உமா! வெள்ளித்தேர், நம்மை மறைத்தேவிட்டது! வெள்ளித்தேர் உற்சவ வைபவத்தில், மக்கள் இலயித்துப்போய், நம்மைத் தொழவும் மறந்து போயினர். ஆஹா! தேரின் அழகைப் பார், பளபளப்பைப் பார், அலங்காரத்தைப் பார், என்று இப்படித், தேரைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனரேயன்றி, உன் அருளொழுகும் கண்களைப்பற்றியோ, என் ஜடாமுடிபற்றியோ, கையிலுள்ள மழு, சிரத்திலுள்ள கங்கா, மார்பில் புரளும், நாகமாலை, எனும் இவை பற்றிப் பேசுவாரே காணோம்! வேதனை பிறவாமல் இருக்குமா!