பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

“கங்கைத் தீர்த்தத்துக்கு, சகலரோகங்களையும் குணமாக்கும் சக்தி இருப்பதாகப் பாமரர் நம்புவதை, விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த ஆற்றின் தண்ணீரை, விஞ்ஞான முறைப்படி, பரீட்சித்துப் பார்க்கப்பட்டது — 1917 — 1923-ம் ஆண்டுகளில். பீகார் மாகாண சுகாதார இலாக்கா இந்த ஆராய்ச்சியை நடத்திற்று. அந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, கங்காநதித் தண்ணீர் நோய்களைத் தீர்க்கும் சக்தி பெற்றது அல்ல என்ற உண்மை விளங்கிற்று, என்று இன்று டில்லி பார்லிமெண்டில், சுகாதார மந்திரி, ராஜகுமாரி அம்ருத்கௌரி கூறினார்கள்.”

இதனைக் கேட்ட கைலைநாதன், கோபமடைந்தார் — பிறகு, ஓரளவு சாந்தி அடைந்து, சமர்த்தாகப் பேசக்கருதி, “கங்கா! ராஜகுமாரி சொன்னது கேட்டு, நாம் வீணாக வருத்தப்படக்கூடாது. அவர் சொன்னது, நோய் தீர்க்கும் சக்தி உனக்கு இல்லை என்றுதானே தவிர, பாபத்தைப் போக்கும் சக்தி கிடையாது என்று கூறவில்லையே — ஏன் அழ வேண்டும், நீ!” என்றார்.

கங்காதேவி, முன்னிலும் அதிகமான கோபம்கொண்டு, “பேஷ்! அழுகிற குழந்தைக்கு வாழைப்பழம் தருகிற முறையிலே பேசுகிறீர் போலும்! கேவலம், நோய்களைத் தீர்க்கவே, எனக்குச் சக்தி கிடையாது என்று கூறிவிட்ட பிறகு, பாபத்தைப் போக்கும் மகிமை எனக்கு இருப்பதாக, யார், இனி நம்புவார்கள்? பாமார்கள், பலகாலமாக நம்பி வந்தததை, பாழாய்ப்போன விஞ்ஞானம், அழித்துக் கொண்டு வருகிறது. நோய் போக்கும் நீரல்ல - பாபம் போக்கும் தீர்த்தமல்ல என்று, கூறத் துணிவு கொண்டுவிட்டனர்–