கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!
கதவு திறக்கும் சத்தம் கேட்டது:
கருப்பண்ணசாமி அலறியபடி உள்ளே ஓடலானார், ஒளிந்து கொள்ள இடம் தேடினார்.
‘களுக்’ கென ஓர் சிரிப்பொலி கேட்டது. கருப்பண்ணசாமி, கோபங்கொண்டு, “வேதனைப்படுகிறேன் நான்—இந்த வேளையில் கேலி வேறு செய்கிறாயா?” என்று கேட்டார், சிரித்தபடி தன் எதிரே வந்த தேவியைப் பார்த்து.
“கருப்பண்ணா!—என்ன கலக்கம்! ஏன் ஓடுகிறாய், ஒளிகிறாய்”—என்று தேவி கேட்க, கருப்பண்ணசாமி “காதிலே விழவில்லையா, மணிச் சத்தம்” என்று கேட்டார்.
“விழுந்தது—அது கேட்டு அச்சம் ஏன் வரவேண்டும்—ஆச்சரியமாக இருக்கிறதே”—என்று தேவி கேட்டார்.
“உனக்கும் ஒன்றும் புரிவதில்லை. யாரோ பக்தர்களல்லவா வருகிறார்கள்.........!” என்று பயத்துடன் பேசினார் கருப்பண்ணர்.
“பைத்தியமே! பக்தர் வருகிறார் என்றால் பயம் ஏன் வரவேண்டும்? உன்னைத் தொழ, சூடம் கொளுத்த, சோட சோபசாரம் செய்ய, படையல் போட வருகிறார்கள் பக்தர்கள்.