93
கிறான்—காரணம் கேட்டால் பெரிய படையலிட்டிருக்கிறேன், என்று கூறுகிறான்.”
தேவி குறுக்கிட்டு, “இதென்ன புது விஷயமா கருப்பண்ணரே! இப்படிப்பட்ட பக்தர்களை நாம் நெடுங்காலமாகப் பார்த்து, பழகிக்கொண்டுதானே வந்திருக்கிறோம்” என்று கூறிட, கருப்பண்ணசாமி மனக்கொதிப்புடன் “இப்போது பக்தர்கள் அந்த அளவோடு நின்று விடவில்லை தேவி — கேவலப்படுத்துகிறார்கள், போலீசின் பாதுகாப்பிலே வாழவேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்னை” என்று கூறினார்.
“கேவலப்படுத்தினார்களா! யார்!” என்று தேவி ஆச்சரியத்துடன் கேட்டார்.
அவரைக் கேலி செய்வதுபோல கருப்பண்ணர், “யார்?”—என்று ஒருமுறை கூறிவிட்டு, “நாஸ்திகர்கள் கேவலப்படுத்தினார்கள் என்று கருதுகிறீரா தேவி! அவர்ககளல்ல. அவர்கள் மனிதருடன் பழகுவதும் மனிதர்களின் பிரச்சனைகளைக் கவனிப்பதுமாகக் காலந் தள்ளுகிறார்கள். என்னைக் கேவலப்படுத்தியது, பக்தர்கள்!—கைகூப்பித் தொழுது கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்களே, கற்பூரம் கொளுத்துகிறார்களே அந்தப் பக்தர்கள் என்னை, செச்சே! இப்போது எண்ணிக்கொண்டாலும் எனக்கே வெட்கமாக இருக்கிறது, கேவலப்படுத்தினார்கள்—போலீசாரின் துணையால் நான் மீட்கப்பட்டேன்” என்று கூறினார். தேவிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
“கருப்பண்ணரே! என்ன பேசுகிறீர். பக்தர்கள்-போலீஸ்-ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பேச்சாக இருக்கிறதே” என்றார்.