பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 1 () வள்ளுவம்

என்றபடி, புலமை யுள்ளங் கொண்டு சுவை பொதுள நல்குரவைப் பாடாது, இன்மையின் இன்மையே இன்னாதது”, (1041), இன்மை என ஒருபாவி (1042), அறம்சாரா நல்குரவு (1047) எனத் துடிப்புள்ளம் கொண்டு வருத்தம் மீதுார வைது பாடுவார். கல்வியின்மை, அறிவின்மை, பண்பின்மை என இன்மை பெற்றார்.பால் ஓரினமாகப் பொருளின்மையும் சேரவேண்டும். இதுவே காரணகாரிய முறை. ஆயின் நாம் காண்பது என்ன? “நல்லார்கட் பட்ட வறுமை (408) என்றாங்கு கல்வி, அறிவு, ஒழுக்கங்கள் உடையாரையே இன்மை எளிதில் பற்றுகின்றது. உடல் நோய் போல் இவ்வின்மை நோயும் பிற நலங்களை யெல்லாம் உறிஞ்சுகின்றது. இவ்வின்மை அளவிறந்து நீட்டித்திருந்தால், கல்வி, அறிவு, ஒழுக்கம் எல்லாம் இன்மைப்படுகின்றன. தொல்வரவும் தோலும் கெடுக்கும் என்றும், நற்குடிப் பிறந்தார்க்கும் இளிவரவுச் சொல்லைப் பிறப்பிக்கும் என்றும், நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் அறிவுடையார் சொற்பொருள் இகழப்படும் என்றும், இன்மையால் நல்லன பல கெட்டழிவதைக் கண்டு, மழை யின்மையால் வளர்ந்த பைங்கூழ் வாடக்கண்ட உழவன் போலக் கவல்வர். ஈன்ற பொழுதில் பெரிதும் உவக்கும் (69) எனச் சால்புக்கும், ஈன்றாள் பசி காண்பானாயினும் (656) என வினைத் துய்மைக்கும், ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் (923) எனக் குடித் திருத்தத்துக்கும் பற்றாகத் தாயன்பு சுட்டும் ஆசிரியர். ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப்படும் (1047) என அவள் அன்புப் புரட்சி காட்டுவர். திங்கள் பல சுமந்து பொறையுயிர்த்த தாயே தன் மகனல்லன், இவன் யாரோ என அயற் பார்வை செய்வாளேல், வறுமையின் கொடுமைக்கு வேறெல்லையும் வேண்டுமோ? செவிலித்தாயை நீக்குதற்கு, “ஈன்ற தாய்” என அடை கொடுத்தும், நிலம் திரியினும் அன்பில் திரியாத் தாயும் புறக்கணிப்பாள் என்று காட்டற்கு, “தாயானும்” என உம்மை கொடுத்தும், இன்மையின் இன்னாமையை வெளிப்படுத்தினர்.

இலக்கியப் புலவன் சிறந்த பண்பாவது, கூற்று வேறு தான் வேறு என்று எண்ணாமை. அஃதாவது சொல்லப்படும் மாந்தரும் சொல்லுந் தானும் ஒன்றி நிற்கும் பிரிவில் உணர்ச்சி. இவ்வீடு