பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1.2 வள்ளுவம்

பிழைப்பர். உண்டியின்மையே மெய்யான வறுமை எனப்படும். நெய்யூர்தி ஊர்ந்தார் வண்டி ஏறுதலையும், வண்டியூர்ந்தார் நடத்தலையும், நல்குரவெனக் கருதி இளிவரலுறக் காண்கின்றோம். அடுக்கு நிலை மாடத்து விளையாடினார் ஒட்டு வீட்டில் வாழ் தலையும், அவ்வீட்டார் கூரைக்கண் வதிதலையும், கூரை யகத்தார் வாடகைக்குக் குடியிருத்தலையும் நிலைத்தாழ்வாக எண்ணி நானுறக் காண்கின்றோம். இனைய புறத்தாழ்வெல்லாம் நலக் குறைவு எனப்படுமேயன்றி நல்குரவு எனப்படா. உயிரனைத்திற்கும் பொதுவாய் வயிற்றுப் பிணியே அப்பெயர்க்கு உரியது. உடல் சுருக்கி, அறிவகற்றி, மனம் மாளச் செய்யும் பசி நோய்க்கே இன்மைப் பெயர் சாலும். ஆதலால் பிற எளிய நிலையினராகத் தம்மைக் கருதாது. மிகத் தாழ்ந்த பட்டினி மக்களோடு ஒன்றுபட்டு, நேற்றும் வந்தபசி வறுமை இன்றும் வருங்கொல் என்று வள்ளுவர் துடிதுடித்தனர். நோய் குறைதற்கும் மறத்தற்கும் உறங்குதல் ஒர் இயற்கை நெறி. உறங்கியேனும் பசிப் பிணியைச் சிறுபொழுது மறந்திருப்போம் எனின், நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது (1049) என வழியற்ற வறுமைக் கொடுமையைச் சுட்டுவர். உண்டு தனித்தாலன்றி உறங்கித் தணிக்கும் பிணியன்று அது எனக்காட்டுவர். .

மேற்காட்டியாங்கு நல்லன அழித்து அல்லன தந்து உயிர்க்கேடு செய்வது பசியாதலின் மக்கள் ஒழுக்கம் பாராது. பசி நீக்க முனைப. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கவில்லை என்னும் பழ மொழிக்கு ஒப்ப, செல்வமுடையவன் கூட, பசி சுடும்போது அறிவிழந்து வைது ஆர்ப்பரவஞ் செய்யக் காண்கின்றோம். ‘ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் (225) என்பர் வள்ளுவர். இஃது இவ்வாறாயின், யாதொன்றும் இல்லா வயிறுடையார்களின் துடிநிலை சொல்லத் தகுமோ? சுவர் இருந்தன்றோ சித்திரம்; உடல் இருந்தன்றோ ஒழுக்கம் என்ற கோளினராய், வெஃகியும் பொய்த்தும் திருடியும் பொருள்தேட விழைகின்றனர். பசிப்பிணி பொறாது மக்கள் கொள்ளும் ஒழுக்கத் துறவை உட்கொண்டார் நம் ஆசிரியர்.