பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்மை நிலை 115

அறிவுடை நண்பர்களே! ஒருவன் செல்வன் ஆதற்கு இரப்பு வழி சுட்டினார் அல்லர், ஆசிரியர். முதல் இன்மை எனப்படும் வயிற்றுப் பசி தீர்த்தற்கென்றே இவ்வழி காட்டினர். மக்கள் தோன்றிய நாள்தொட்டே பசிபோல் வறுமையும் உடன்வரக் காண்கின்றோம். இஞ்ஞாலத்து, எவ்வுயிர்க்கும் பசிப்பிணி இல்லை; மக்கள் அனைவோரும் ஒருவர் விலக்கின்றிப் பசி தீர உண்டு வாழ்ந்தனர். என்ற செல்வ வரலாற்றை நாம் கற்றோம் இல்லை. எக் காலத்தும் எந்நாட்டகத்தும் பசியலைப்பட்ட மக்கள் பலராய வரலாறுகளையே நாம் கற்றிருக்கின்றோம். உயிர்த்தோற்ற வளர்ச்சியில் தலைசான்ற உயர்திணை மக்கள் கேவலம் உடற் பசியால் நலிவது அழகோ என்று கவன்று. இப்பசி யொன் றனையாவது மன்பதைக்கண் ஒழிப்போம் என்று வரிந்துகட்டிப், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாடுபட்டு வரூஉம் பெருமக்கள் சாலப் பலர்; நூல்களும் சாலப்பல. நம் சங்க நூல்களும் அவ்வழித் தோன்றிய நூல்களும் சிறப்பாக மணிமேகலைக் காவியமும் பசி நீக்கமே அறம் என்றும், பசி யொழித்தோனே அறவோன் என்றும், உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்றும் வலியுறுத்துப. பாரதிப் பெருமகனும் “தனியொருவனுக்கு உணவிலையெனில்” என்று தொடங்கி வஞ்சினம் மொழிவர்.திருக்குறள், இன்மையாவது பசிப்பிணி, ஆற்றலாவது பசியை மாற்றல்; இன்மையுள் இன்மை யாவது விருந்து ஒம்பாமை என்றும், அறம் எனப்படுவது பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்; இல்லறம் எனப்படுவது பழியஞ்சிப் பாத்துாண் உடைமை என்றும், பொருள் வைப்பு என்பது அற்றார் அழிபசி தீர்த்தல் என்றும் சோற்றிகையையே ஒருதலையாக மொழியா நிற்கும்.

பெருமக்களின் அறக்கூற்று இவ்வண்ணமாகவும் நாம் எங்ஙன் நடந்து கொள்கின்றோம் உண்டிச் சாலைகளில், காரடிகளில், கோயில்களில், கூடுமிடங்களில், நம் இல்லங்களில் ஒடேந்திகளைக் காணுங்கால், நம்முள் ஈகையுள்ளம் நன்கு உடையாருங்கூட, இன்று எங்ஙன் நடந்துகொள்ப காசு ஈந்து கடன் கழிக்கின்றோம். இரவலன்பாலே ஓரணாவிற்குச் சில்லறை பெற்று அவன் விரிதுண்டில் காலனாபோட்டு நாகரிகக் கொடை செய்கின்றோம்.