பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வள்ளுவம்

செல்வர். தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் (201), ‘அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃது அறிகல்லாதவர் (428), தான் அடங்காப் பேதையிற் பேதையார் (834), பிறர்மேல் வடுக்கான வற்றாகும் கீழ் (1079) என்பனவெல்லாம் குணம்பற்றி எழுந்த காரணப் பெயர்கள்.

அறிவுடை நங்கையர்களே! அறிவுடை நம்பிகளே! நாம் துணியத்தகும் வள்ளுவம் யாது எந்நிலையிலும் நமக்கு முன்னேற்றம் உண்டு. தன்னைப் பேதையெனக் கயவன் என எவனும் மனமார எண்னான். அவ்வாறு உண்மை நிலை யுணர்ந்து எண்ணுவனேல், அவன் உயர்வான் என்பதற்கு அவ்வெண்ணமே சான்று. நாம் பட்ட கீழ் நிலையே நம்முடைய முடிபுநிலை என்று சோர்ந்து விழினும் தூக்கிவிட வல்ல நெடுங்கையும் அனைத்துக் கொள்ளவல்ல அகன்ற மார்பும் உடையவர் வள்ளுவர். ஆதலால் நமக்கு வேண்டுவது அறிவுப் பிறப்பினம் என்னும் பிறப்பு நம்பிக்கை. நமக்கு வந்த பிறப்பை மதித்து, என்றும் அறிவோட்டம் காத்து, நிலையொடு பொருந்தித் திருக்குறளைக் கற்போமேல், நம் பிறப்பு நறுமணம் கமழும் இனிய மலர் வாழ்வாகும்.