பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி 151

இகலுறாது பற்றிக் கொளத் தகும் ஒரு தனிப் பெருஞ் செல்வம். சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்’ என்ற தமிழ்ப் பாரதி ஆணைப்படி யாண்டும் பறந்தோடி அறிவன அறிதல் நங்கடன், இன்றேல் ஊருள் ஒதுங்கிய குடிசைபோல, நம் நாடு உலகப் போக்கு இழந்து பிற்படும். இஃது ஒரு பாலாக, மற்றோர் உண்மையை உள்ளுமின் முழுக்க முழுக்கப் பிறரையே நாடிப் பின்பற்றி அலைபவன் ஒருபோதும் வேரூன்றான். எம்மகனும் தீய நிறைவினன் அல்லன். எவன் மாட்டும் நற்பண்புகள் சிலவேனும் உள. ஒருவன் மக்களிடை வாழ்கின்றான் என்பீரேல், அதுசாலும் அவன்பால் ஒருசில மாண்புகள் உண்டு என்று துணிதற்கு ஆதலின் தன் தனித்தன்மை விடாதும் கெடாதும் ஏனையோர் அறிவைத் தலைக்கொள்வதே பொருளுடைத்து. நல்ல சூழ்நிலைகளைப் பயன்கோடற்கு விதையொன்று வேண்டுமாப் போல, நல்லுலகப் பகுதிகளைப் பயன் கொள்வானுக்குத் துளங்காத் தனித் தன்மை வேண்டும். இமையாக் கண்ணனாய் முற்றும் பிறர் சுவடு பார்ப்பவன் சிறப்புறான். பிற நோக்காது திறவாக் கண்ணனாய் யான் எனது என்று இறுமாந்திருப்பவன் வளர்வுறான். வேண்டுழி வேண்டுழி மூடலும் திறத்தலும் செய்யவல்ல அறிவுக் கண்ணனுக்கே - அளவறி மதுகையானுக்கே - வாழ்வு வீறெய்தி ஓங்கும். ஆதலின் கல்வி வரைவார்க்குப் பிறநாட்டு ஆய்வொடு தன்னாட்டு ஆய்வுத் திறமும் இன்றியமையாது. ஆங்கிலவழி அறிவுரம் பெற்ற இன்னோர் இதுகாறும் ஒரு பொருளாக மதித்துத் தமிழ் நூல்களைக் கற்றிலர். அதன் மேலும் தமிழ்ப் புலவர் குழுக் கூட்டி நாட்டுக் கல்வி முறை கேட்கும் துணிச்சலும் இலர்.

பழங் கல்வி முறை இந்நாள் உலகப் போக்கிற்கு ஒட்டாது என்று அத்துணை எண்மைத்தாய்ச் சொல்லி விடமுடியுமா? முன்னைத் தமிழகத்துக்கும் வரும் தமிழகத்துக்கும் பன்மானும் ஒற்றுமை உண்டு. முதல் ஒற்றுமை இரண்டும் உரிமை சான்றன. சாதி சமய மொழிப் பிணக்கு அற்ற நாட்டினை உருவாக்குவதே நம் உள்ளக் கிடையாயின், அங்ஙன் உருக் கொண்டிருந்த காலத்து எழுந்த தமிழ்