பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி 169

பறிப்பார் கூற்றை நம்பி, கைப்பொருளை மானத்தோடு இழந்து, அறிவும் சுருங்கி மன்றேறித் திரிவாரே சாலப் பலர். ஆகாச் சுற்றுப்புறச் சமூகத்தை விடுத்து. யாரும் அறியாப் புத்துர் போகி வாழவல்ல முன்னுணர்வினர் எனையர்? பிறந்த ஊராயிற்றே எனத் தம்மூர் பற்றிக்கொண்டு, உள்ளது சுருங்கிக் குற்றுயிரால் மடிவாரே பலப்பலர். உடல் வலிக்கு ஏற்ப அடக்கிச் சிற்றின்பம் துய்ப்பாரும், பொருள் வலிக்கு ஏற்பக் குழந்தைகள் பெற்றுக் காமத்துறவு கொள்வாரும், எவ்வெண்ணிக்கையர்? அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்பது காப்பு வள்ளுவம். இக் கருவியை முன்கூட்டியே ஆளாதார் வாழ்வு சீரழியும் என்பது உலகக் காட்சி. எதிரதாக் காக்கும் அறிவினார் (429) என உடன்பாட்டானும், வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (435) என எதிர்மறையானும், ‘ஆவது’ காணும் அறிவுவன்மை வாழ்வுக்கு இன்றியமையாது என வலியுறுத்துவர். o

உலகப் போக்கினை ஒரு நூறாண்டளவும் முன்னறிந்து கணிக்கவல்ல திறத்தினரும், நம்முள் அரியராக உளர். தம் பின்னை வாழ்நாள் முழுதினையும், இருபத்தை யாண்டு ஐம்பதினாண்டு முன்கூட்டியே வகுத்தியலும் அறிவுக் கூறுடையாரும், நம்மிடைச் சிலராக உளர். நாலைந்து ஆண்டு நாலைந்து திங்கள் நாலைந்து நாள் எனக் குறுகிய வருங்காலத்தை முன்னுணரும் பெற்றியாளரும் கூட, எண்னத் தக்கவராகவே உளர். மறுகணம் வருவது பகுத்து முன்காண வல்லாதாரும், அங்ஙன் காலப் பகுத்தறிவு வேண்டும் என்ற உணர்வு கூடத் தோன்றாதாரும், நம்முள் சாலப்பலர். இப்பலருள் கற்றார் பெரும்பாலோரும் அடங்கக் காண்கிறோம். கற்றார் பலர் அறிவுடையாராக வளரவில்லை. ஆடை நெய்பவன் தொழிலாளி எனப்படுவானே யொழிய, அதனை உடுப்பவன் உடுத்துந் தொழில் காரணமாய்த் தொழிலாளி எனப் பெயர் பெறுவானா? வருங்கால உலகைப் பன்னூறாண்டு நினைந்து தம் அறிவை நூலால் வடித்தவர் அறிவர் எனற்கு உரியரே அன்றி, அப்பனுவலைக் கற்கும் அறிவு மாத்திரையால், கற்பவர் ‘அறிவர்” என்ற பெயருக்கு உரியர் ஆகார்.