பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை 191

படுத்தாமையின், ‘விருந்து புறந்தருதலும் இழந்த என்னை’ எனவும், ‘யாவதும் போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ எனவும், அவன் சாக்காட்டிற்கு முன் கழிவிரக்கங்கொண்டு சொல்லி அமைந்தாள். தாம் வீழ்வார் தம்வீழப் பெற்றவர் (1191) என்றபடி, தான் விரும்பியான் தன்னை விரும்பப் பெறாமையின், பரலற்ற காமக் கனியை உண்டிலள். குடும்பம் பேணா ஆண்வழிச் சேறல் என்னும் புதுக் குற்றப்பட்டாள் கண்ணகி.

ஒருவர் மென்மையை - வலுவின்மையை - மற்றவர் தமக்குப் பயன்படுத்திக் கொள்வதே பலர் சூழ்ச்சியாகக் காண்கின்றோம். ஒருவன் எப்பொழுது குற்றப்படுவான் என்று சோர்வுப்பதம் பார்த்திருந்து, குப்புற வீழ்ந்தானைக் குழியில் தள்ளி, மேலும் மண் அள்ளிப் போடுவதே பலர் அறிவுக் கூர்மையாகக் காண்கின்றோம். இவ் வாகாப் புறவுலகப் போக்கு குடும்ப அகவுலகத்து நினைக்கவும் கூடாதுகாண். கணவன் மனைவி இருவருள் ஒருவர் உடற் குறையாக, அறிவுப் பிழையாக, பண்புத் தவறாக இருப்பரேல், எனையோர் அவற்றைத் தன்னலமாகப் பயன் கொள்ளல் அறவும் ஆகாது. இன்று பல குடும்பத்தாரிடைக் காணுமாப் போல, கணவனோ மனைவியோ ஒருவர் குற்றத்தை ஊரறியப் பிறர் வீடறிய உய்த்துக் கொண்டு புறந் தூற்றும் கயநிலையும் ஆகாது. இருவருள் ஒருவர் பிழை செய்வராயின், அக்குற்றத்தை நிரப்பும் குணப் பெருக்கு ஏனையோருக்கு வேண்டும். ஒருவர் குறையால் குடும்பப் பொதுநிலையம் கெட்டுத் தளராதபடி, ஈடுசெய்யும் அறிவுப் பெருக்கு ஏனையோர்க்கு வேண்டும். குற்றமே காக்க பொருளாக (434) என்பது குடும்பக் குறிக்கோள். *

குடும்ப உறுப்பினருள் ஒருவர் குற்றப்படுவரேல், அதனைப் பொறுத்துக் கோடல் மட்டும் ஏனை யுறுப்பினர் கடன் அன்று. பொறுத்தபின், மீண்டும் குற்றம் புகாமல் அன்பால் இடித்து வரை நிறுத்தலும் அவர்தம் கடனாகும். அங்ஙன் இடிப்புக்கு உடன்பட்டுக் குடிநலன் நோக்கித் திருந்துவது. குற்றவுறுப்பினர்க்கு அறம் ஆகும் என ஈண்டுச் சுட்ட விரும்புகின்றேன்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)