பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை 197

செய்தித்தாளில் பெயர் வர வேண்டி வரிந்து கட்டிச் செலவு செய்யும் ஆரவாரவுணர்ச்சியே செல்வச் சிலருள்ளும் பலர்பால் உண்டு.

இப்பொய்யுணர்ச்சி பெருகிப் பரவி வரும் இவ்வுலகில், கண்கண்ட வறிய தமரைக் காக்கும் மெய்யுணர்ச்சி யுடையோர் மிகச் சிலரே போலும். எம் அன்னையைப் பெற்றோரும் இச்சிலருள்

- இருவராவர். அவ்விருவரும், உண்மைத் துறவிகள் போலும் எம்மை

- பயந்தோர் இருவரும் குழவிப் பருவத்து விட்டுச்சென்ற பேரர்களாகிய எம் ஐவரை - ஓராண்டு ஈராண்டு அல்ல இருபத்தையாண்டுகள், ஒராயிரம் ஈராயிரம் அல்ல பல்லாயிரத் தொகை ரூபாய்கள் மனமுவந்து செலவிட்டுக் காத்த குறிக்கோ ளுடையவர்: ஒரு குடித் தொடர்பை நினைந்து ஐந்து குடியாக்கிய உயர்வினர். பெற்றோர் இருந்தும் ஒரு பிள்ளைக்குக் கடமை செய்யத் தவறும் இவ்வுலகிடை, பெற்றோரும் பிறவும் இல்லா ஐந்திளங் குழந்தைகளை, ஆண்டு பலவாக ஒரே நினைவொடு புரந்து உலகியல் கற்பித்த மெய்த் தாய் தந்தையர்: எம் குடியொடு பிற பல் சுற்றங்களையும் பேணும் உலக நலத்தர்; புகழென ஒன்று நினைக்க அறியாது கடன் ஆற்றும் பொய்யா வாழ்வினர். அண்மை நலம் பேணும் இத்துாய தமிழ்ச் சான்றோர் போல், ஆற்றல் வாய்ந்த செல்வச் சிலர் தம் சுற்றத் தொகுதி பேணுவது தம் மெய்க்கடன் எனத் தெளிவாராக என்பது என் அறிவுரை. தெளிந்து செய்வரேல், குடிசெயல் வகை உண்மையாகவே உலகு செயல் வகையாம் அன்றோ!

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று (523) என்பது சிறந்த வாழ்வியல். கணவனும் மனைவியும் மக்களும் தம்முள் ஒக்க இருந்து உண்டும் உரையாடியும் ஒல்லும் வினை செய்தும் அளவளாவல் வேண்டும். இந் நல்லியல் இன்று பல தமிழ்க் குடும்பங்களில் அமையவில்லை என்பது நானற்கு உரியது. ஒரு குடியுறுப்பினர் சுற்றுக் குடியினரோடு மனம் விட்டு அளவளாவல் வேண்டும். சுருங்கச் சொல்லின் அளவளாவுகை குடும்ப வள்ளுவம் என்று அறிக. தன் குடும்பத்தைச் சிற்றுலகமாகவும், உலகத்தைத் தன் பெருங் குடும்பமாகவும் எண்ணும் வாழ்வியல் நம் வள்ளுவப் பெருமகன் கண்டறிந்த குடியியல் ஆகும்.