பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு \ 199

போரன்று என்று போரொழிவு பரப்புகின்றோம். ஒரு நாடு தன்னந்தனியாய் வாழ வியலாது; பிற நாடுகளின் நல்ல தீய செலவுகள் ஒரு நாட்டினைத் தாக்கவே செய்யும்; ஆதலின், தன்னாடு என்றளவில் ஆய்வை நிறுத்திக் கொள்ளாது, உலக அடிப்படையில் ஒரு நாட்டுக்குத் திட்டம் கோலவேண்டும். ஞால நன்மை, ஞால வமைதி, போர்த்தடுப்பு ஆகியவை என் நாட்டுக் கோள்கள் என்று ஒவ்வோர் அரசும் சொல்வது இன்று பெருகிவரும் எளிய வழக்கு. உலகத்தின் ஒரு கோடியில் கொந்தளிப்பு ஏற்படின். இக்குமுறல் உலகப் போராய்விடக் கூடும்; நெருக்கடியை விரைவில் தீர்த்து வைம்மின் என்று யாரும் அறியப் பெருங்குரலிடக் காண்கின்றோம்.

சாதி சமய நிறங்களாலும், மொழி அரசு நாடுகளாலும், பல்வேறு பழக்க வழக்கங்களாலும் பிரிவுண்டு கிடக்கும் மக்களினம், ஆராயுங்காலை, ஓரினம்; இடத்தானும் காலத்தானும் வேறுபட்டுத் தோன்றும் உடலின் நிறத்தையும் அமைப்பையும் வைத்துக் கொண்டு, நாம் ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கோடல் அறியாமை என்பது இன்று வளர்ந்து வரும் நல்லறிவு. ஒருவன் முன்னேற்றத் திற்கு இப் புறவேறுபாடுகள் இடையூறு ஆகா: இடையூறாகச் சாதிசமய நிறச்சட்டங்கள் இயற்றல் ஆகா: இதுகாறும் இயற்றிய குறுக்குச் சட்டங்கள் ஒழிதல் வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். இந் நல்லெண்ணம் இன்று ஒரளவு செயற்படவும் காண்கின்றோம். ஒரு நாட்டுள்ளும் அறியாமையால் பகையுணர்ச்சிப் பட்டுக் கிடந்த பல்வேறு இன மக்கள், இப்போது தம்முள் கசப்பின்றி அளவளாவ முற்படுகின்றனர். ஒரு நாட்டவர் பிற நாடு சுற்றுவதும், பன்னாட்டவ ரோடு உடனிருந்து உண்டு களித்து மனங்கலந்து பழகுவதும், இன்று இயல்பாகக் காண்கின்றோம். இரண்டு அரசுகளுக்குள் சிறு பெரு வேறுபாடுகள் இருப்பினும், அவற்றால் பல நல்லுறவுகள் தடைபட்டு விடுவதில்லை. மக்கட் செலவு வரவோ, வணிகப் போக்குவரத்தோ நின்று விடுவதில்லை. ஒரு வேறுபாட்டை நினைந்து மற்றோர் வல்லுறவைக் கெடுத்துக் கொள்வதில்லை. அந் நல்லுறவால் இவ் வேற்றுணர்ச்சி மட்டுப்படும்; அகலும் என்னும் நம்பிக்கையில் இற்றை அரசுகள் நடந்துகொள்ப. அரசுறவில் வேற்றுமை யிருப்பினும், இருநாட்டு விளையாட்டாளர்கள் 2f