பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை 229

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் - (318)

இக்குறள்கள் தற்சுட்டும் நடையன; தன்னைச் சான்றாக வைத்து அறம் ஊட்டும் அடிப்படையுடையன.

2. ஒழுக்கத்திற்குத் தன்னலம் ஒரு பற்றுக்கோடாகும். தன் வாழ்க்கை பேணுவது குற்றமன்று; அறிவுடைமை. அயலான் வயற்கு ஒடும் கால்வாய் நீரை மறித்துத் தன் செய்க்குப் பாய்ச்சுவதுபோல், பிறர் துய்த்தற்கு உரிய இன்பத்தை அணையிட்டுத் தன்னலமாக வஞ்சித்துக் கொள்வதுவே பழியும் கேடும் ஆகும். உண்மையான தற்பற்றுடையவன் ஏனையோர் தற்பற்றுக்கு இடையூறு செய்யான். செய்யின், பகை தோன்றித் தன்னலக்கேடு வரும் என அஞ்சுவான். ‘அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ (428) என்றபடி, இத்தன்னச்சம் போற்றிக் கொள்ளத் தகுவது. நன்மக்கள் தன்னலத் துக்கு ஒரு கோடிட்டுக் கொள்வர்: தற்காப்புக்கு ஒரு வரம்பரண் செய்துகொள்வர்; இன்றேல், நெஞ்சு உலக முழுதும் தனதாக நினையும்; பிறருரிமையைத் தனதாக மயங்கும்.தானொன்றே வாழப் பிறந்தது என இறுமாக்கும். அளவறிதல் என்பது எத்துறைக்கும் வேண்டிய வாழ்க்கைப் பொது வள்ளுவம்.

உலகப் பூசல் ஒராற்றான் உரிமைப் பூசல் எனப்படும். ஒருவன் தன்னலத்தின் எல்லை இறந்து பிறரெல்லைக்குள் ஓயாது புகுந்து குறும்பிழைக்கின்றான். மற்றையோர் உரிமையைப் பறித்துண்டா லன்றிப் பலர் மனம் அமைதி கோடலில்லை. இவ்வுரிமைப் பறிப்பினையே களவு எனத் திருக்குறள் இடித்துரைக்கும். களவாடிக் களவாடிச் சுவை கண்டவர், அளவல்ல செய்தாங்கே வீவர் (289) எனச் சாக்காடு சுட்டுவர். உரிமையிழந்தவன் தாக்கு தற்குக் காலமும் வலியும் பார்த்துக் கிடப்பான்; ஆதலால் யாரொருவர் உரிமையையும் கவர்வது முடிவில் கவர்ந்தானுக்கே தீதாய் முடியும். தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் - துன்னற்க தீவினைப் பால் - (209) தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் (206)