பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வள்ளுவம்

இப்பொருள் சொல்லிடை என்று கலக்கும் ஒருவன் பேசுங் காலத்து, எழுதுங் காலத்து, அஃதாவது சொல்லை ஆட்சிப்படுத்துங்காலை, எடுத்தாளும் சொல்லுள் அன்னவன் நெஞ்ச நினைவு கலந்து விடுகிறது. இந்நெஞ்சப் பொருள் ஆள், இடம், காலந்தோறும் தனித்தனி வீற்று வீற்றுப் படும். சொற்பொருள் உடல் போல்வது; நெஞ்சப் பொருளே உயிரனையது. இவ்வுயிர்ப் பொருள் காண்டற்கு அரியதாயினும் நோக்கெனும் கருவிகொண்டு. காணற்கு உரியது. உள்ளப் பொருளைக் கண்டு கொள்ளவல்ல பண்பட்ட அறிவுக் கூர்மையின்றிச் சொற்பொருளை மட்டும் கற்றொழியும் பரந்த மொழிப் பயிற்சியால் பயன் என்னோ?

“இவன் மகனே தோழி என்றாள் ஒரு குமரித் தலைவி. இங்ஙன் சொல்ல வாயெழுப்பிய சூழ்நிலை யாது தன் சொல்லால் தலைவி எதிர்பார்க்கும் பயன் என்ன? பொருந்திய கற்பனைப்படுத்துக” என மாணாக்கர்க்குத் தேர்வில் ஒரு வினா வருவதாகக் கொள்வோம். எத்துணைப் பேர் எத்துணை வகையாகவோ எழுதி முடிப்பர். அகநானூற்றுப் பாடலை (48) யாத்த தங்கால் முடக்கொற்றனார் தீட்டிய சூழ்நிலையைக் கேண்மின்!

“என் மகள் சோற்றை மறந்தாள்; பாலும் பருகாள்; வருத்தமுற்று மேனியும் பசந்தாள் தோழி, நீ அறிவாயன்றோ காரணம்” என்று தலைவியின் தாய் வினவுகிறாள். வினவக் கேட்ட தோழி, “அவள் துன்பத்துக் காரணம் யானும் விளங்க அறியேன். ஆனால் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கேள். நேற்று நின்மகள் எம்மொடு பூக்கொய்யச் சென்றாள். புலிநிறம் பாய்ந்த வேங்கைமலரைப் புலி புலி யென்று கூவிப் பறிப்பது நம் வழக்கங் காணாய். அவ்வழக்கப்படி, தலைவியும் நாங்களும் புலி புலியெனா விளையாடிப் போது உதிர்த்தோம். எங்கள் பொய்ப் புலி யாரவாரத்தைக் கேட்டானோ இல்லையோ ஓரிளைஞன், மார்பிற் செங்கழுநீர்மாலையணிந்தவன் தலையில் வெட்சிப்பூத் தொடுத்தவன், நெஞ்சு கமழச் சாந்து பூசியவன் என் செய்தான்; கடுகியோடி வந்து தொடுத்த அம்போடு, புலி எங்கே, அது போகிய இடம் எங்கே, சொல்லீர் சொல்லீர் என்று துடிதுடித்தான். அவன் பதற்றத்தைக் கண்டு முறுவலித்து யாங்கள் ஒருத்தி புறமே ஒருத்திக்குத் திரையாக, நாணி மறைந்து