பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் நெஞ்சம் 23

ஒடுங்கினோம். எம் புன்முறுவலைக் கண்டான் அச்செம்மல், “நறுங்கூந்தல் மடவீர், பழம் ஒக்கும் நும் செவ்வாயும் பொய்க்குப் பிறப்பிடமாயிற்றோ என்று நகை செய்தான். வேறென் செய்வான்! தேரேறிக் குதிரையை முடுக்கி வந்தவழிச் செல்பவன் திரும்பித் திரும்பி, நின்மகள் கண்ணினையே பன்முறை நோக்கி நோக்கிச் சென்றான். அற்றை விளையாட்டு முடிந்து வீடு மீளுஞ் சாயுங்காலத்து நின்மகள் என்செய்தாளோ எனின் அவன் மறைந்த திசையைப் பார்த்த வண்ணமாய், இவன் மகனே தோழி என ஒரு முக்கூட்டுத் தொடர் மாத்திரம் உரைத்தாள். இதுதான் நெருநல் நிகழ்ந்த நடப்பு” எனத் தோழி தாய்க்கு விடையிறுத்தாள். அவையப் புலவர் தங்கால் முடக்கொற்றனார் கற்பித்த சூழ்நிலை இது.

“இவன் மகனே’ என்ற இரு சொற்களில் தலைவியின் நெஞ்ச வோட்டங்கள் நன்கு புலனாகின்றன. புலியென் ஒலி கேளாமுன் காக்கத் துடித்த அருளும், விற் பூட்டி வந்து நின்ற ஆண்மையும், பொய்க்கு அஞ்சும் ஒழுக்கமும், கண் துளைத்து எய்த காதற் குறிப்புமெல்லாம் தலைவியின் நெஞ்சை உருக்கிவிட்டன. உருகிய குமரித் தலைவி தன் காதல் வேட்கையை இவ்விரு சொற்களில் வைத்துக் குறிப்பிடுகிறாள். மகன் எனத்தக்க ஆண்டகை இவன் ஒருவனே என்று வாழ்க்கை நினைகிறாள். ‘மகனே என்ற கிளவி இவன் ஆடவருட் சிறந்தான் என்பதனொடு, என் கணவனும் ஆனான் என வரிந்துகொண்ட அவள் துணியையும் உடன் காட்டி நிற்கிறது. “நினக்கிவன் மகனாய்த் தோன்றியது உம்” என வரூஉம் மணிமேகலை யடியால், மகனென் சொற்குக் கணவன் என்ற பொருள் பண்டுண்மையை அறிகிறோம். ஆதலின், இவன் மகனே என்ற கன்னி வாய்த் தொடருக்கு, இவன் என் கணவனே எனவும் ஈண்டுப் பொருள்படும். -

இவ் வகப்பாடல் 26 அடிகொண்ட நெடும்பாட்டாயினும், இவன் மகனே தோழி என்னும் ஒரு சிறு தொடரின் சூழ்நிலையைத்தான் ஆசிரியன் விரித்துரைக்கின்றான். யான் முன் வரையறுத்தாங்கு, தலைவி தன் கூற்றால் எதிர்பார்க்கும் பயனென்ன? இதனை இப் பாட்டு காட்டிற்றிலது. ஒரு பருவ நங்கை சட்டென மலர்ந்த தன் காதலைச் சொற்களால் விளம்புதல் அழகிய நாகரிகமன்று என்ற