பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 வள்ளுவம்

சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் அவர்கள் அக்கூட்டங் கேட்க வரவு செய்தனர். மேடைமீது இருவருக்கும் நாற்காலிகள் இருந்தன. சென்னை முதலமைச்சராய், வங்க மாகாணத் தலைவராய், இந்திய மந்திரியாய், உரிமை பெற்ற நம் நாட்டுக்கு முதல் இந்தியத் தலைவராய்ப் பல நிலைப் புகழ் சான்ற இராசகோபாலாச்சாரியார், பண்டிதமணியார் தம் இருக்கையில் வந்து அமருங்காறும், தாம் இருக்கை கொள்ளாது நின்று கொண்டிருந்தனர்காண். உயர்பதவி யெல்லாம் துய்த்துத் திகழும் தாம், நிற்பதால் அவையினர் குறைத்து மதிப்பரோ? என்று மயக்குற்றாரல்லர். நிலையில் பதவிப் பெருமையிலும் நிலைத்த பண்புடைமையைப் பெரிதாகத் தெளிந்தவர். தலைமையிடம் வறிதே இருக்கும் நிலையில், அடுத்த இருக்கையில் தாம் அமர்ந்து கோடல் உலகவொழுங்கு அன்று எனத் தம் செயலால் நன் முறையை அவையோர்க்குக் கற்பித்தவர். அரம் போலும் அறிவு கூரிய இச் செம்மல் ஒழுக்கம். மக்கட் பண்புக்குச் சிறந்த இலக்கியமாகும்.

4. திருக்குறட்கண் வரும் அவ்வுலகக் குறிப்புக்கள் வாழ்வுக்குப் பயன்படுமா?

இவ்வுலகமே நாம் உயிர் மெய்யராய்த் தொழில் செய்தற்கு உரிய வினைக்களம்: அவ்வுலகமாவது வினைப்பயன் துய்க்கும் நுகர்ச்சிக்களம். மறுமை, எழுபிறப்பு, புத்தேளுலகு, அளறு என்று ஆசான் பேசுமிடத்தெல்லாம் இவ்வேற்றுமைக் குறிப்பு கிடைத்தலைக் கண்டுணர்க. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247), ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி (398), மனநலத்தின் ஆகும் மறுமை (459), ‘யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் (346), வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் (50) என வரூஉம் பல்பகுதியெல்லாம் அருள், கல்வி, மனநலம், செருக்கறுப்பு, அறிவுடை வாழ்க்கை என இவ்வுலக ஒழுக்கம் வலியுறுத்தலை உள்ளுக. இனிப்பு அளிப்பதாய்ச் சொல்லும் தாய்க்குக் குழந்தை மருந்து குடிப்பது நோக்கம் ஆமாறுபோல, வள்ளுவர்தம் பிறவுலகத்துக் குறிப்பனைத்தும், நம்மை இவ்வுலகின்கண் ஒழுக்கத்துக்கு உய்க்கும் கருத்துடையன. -