பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை நெஞ்சம் 287

வளர்கின்றது. ஞாலம் பன்னூறாயிரம் ஆண்டுகள் வளர்ந்த பின்னர்த்தான், மக்கட்கரு தோன்றியது. மக்கட் பிறப்பு எத்துணையோ பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்துப் பெருகிய படிமுறை வளர்ச்சிக் கூர்மைக்கு அப்புறந்தான், மொழிக்கரு புலனாயிற்று. இற்றை மனிதன் முற்கூறிய முவ்வுடைமைகளோடும் பிறக்கின்றான். நம் பண்டைத் தொல்பாட்டனோ எனின், நினைவு அறிவு என்னும் உடைமை இரண்டே பெற்றிருந்தான். மொழி என்பது பின்னர்ச் சேர்ந்த புதுவுடைமை; நினைவும் அறிவும் ஆய காதலர்கள் பெற்று விடுத்த நாகரிகக் குழவி. பிறந்த குழந்தை பெற்றோரை வளர்க்குமாப் போல, மொழி இன்று மக்களின் நினைவறிவுகளை வளர்க்கின்றது. நினைத்தற்கும் அறிதற்கும் பிறர்தொடர்பு வேண்டுமாறில்லை. அவை ஒருவன்தன்னைப் பற்றியன. மக்கள் கூட்டுறவு இல்லாக்காலும், ஒருவன் எண்ணுகின்றான்; அறிகின்றான், சொல்லோ எனின், பிறரொடு உறவாடுங்கால் வெளிப்படுவது. தானே தனக்குள் பேசிக் கொள்வது இல்லை. அங்ஙன் பேசுவது தன்னிலைப் புறமொழி என்னும் நாடக வழக்கு ஆகுமன்றி, நடைமுறைவழக்கு ஆகாது. நம் எண்ணத்தை மற்றையோர் அறிவான் ஆளப்படுவது மொழி. அஃது ஒர் அகப்புறக் கருவி. ஆதலின், தன்னைப் பற்றிய நினைவறம் அறிவறங்களைக் காட்டினும், தன்னையும் உலகத்தையும் பற்றிய சொல்லறத்தை “வாய்மையின் நல்ல பிற இல்லை (300) என்று எதிர் மறுத்து நிறுவினார். -

சினத்தல், கள்ளல், கொல்லல், தீய செய்தல் முதலாய உணர்ச்சிக் குற்றங்கள் அஃறிணைக்கும் பொதுவின சொல் பற்றிய குற்றங்களோ உயர்திணைக்கே உரியன ஆதலான், இனியவை கூறல், புறங் கூறாமை, பயனில சொல்லாமை, , சொல்வன்மை, அவையறிதல், அவை யஞ்சாமை என முழு முழு அதிகாரமாகச் சொல்லறம் விளம்புவர். அவற்றான் அமையாது. பிறதலைப்பு அதிகாரங்களுள்ளும் சொற்றுாய்மை பேசுவர். அடக்க முடைமைக்கண், யாகாவா ராயினும் நா காக்க (127), அமைச்சின் கண், ஒரு தலையாச் சொல்லலும் வல்லது (934), துதின்கண், தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச் சொல்லி (685),