பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 - வள்ளுவம்

மனமேயன்றி அறிவு அன்று. மனத்துய்மை அழியாதும் மாறாதும் இருக்க வேண்டும் நிலைப்பொருள். அறிவோ எனின், அறிதோறு அறியாமை கண்டற்றால் (1110) என்றபடி, அழிந்து மாறிச் செல்லும் வளர்ச்சிப் பொருள். யாரும் முழுத் துய்மை பெறமுடியும்; முற்றறிவு உடையராதல் இல்லை. அறியாமையன் பேதை எனப்படுவானே யன்றிப் பொய்யன் எனப்படான். மனமாக உடையவன்போல, ஒழுக்கமிலான் எனப்படான். அறியாததை அறிந்ததாக, அறிந்ததை அறியாததாகத் திரித்து மொழியும் மனநிலையிற்றான் பொய்ப் பெயர் சூட்டப் படுவான். ‘கற்றனைத்து ஊறும் அறிவு (396) என்பராதலின், சாகுந் துணையும் கல்வியால் வளர்ந்து மாறிச்செல்லும் அறிவு வாய்மைக்குத் துணையாகுமன்றித் தாயாகாது. மனத் தூய்மை வாய்மைக்குப் பிறப்பிடன்; வாய்மை அறிவு நல் வளர்ச்சிக்குப் பிறப்பிடன். உள்ளொளியிலிருந்து பிறக்கும் வாய்மை, அறியா இருளை ஒட்டவல்லது என்ற கருத்தானன்றே, சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு (299) என்று உருவகஞ் செய்தார்.

‘எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை (300) என்ற பொய்யாப் பெருமகன் திருமொழி உயர்வு நவிற்சி யன்று: வலிந்துரை யன்று: மெய்யுரை யாகும்; உண்மை நடையாகும். உலகம் நடத்தற்கும் ஒருவன் வாழ்தற்கும் நாணயம் இன்றியமை யாதது. அரசு விதிகட்கு அஞ்சி நாணயமாக நடப்பார் எண்ணத்தகும் மிகச் சிலரே யாவர். அரசுச் சட்டங்கள் உலகினைத் தாங்கி நிற்கவில்லை. நம்பிக்கை கெடாவாறு ஒழுகும் நாணயத்தார் - மனச்சான்றோர் ஞாலத்திற் பலராதலின், உலகம் நிலையாக இயங்குகின்றது. நாணயம் குறைந்தார் சிலராக இருத்தலின், இன்று அரசு விதிகள் மதிப்புப் பெறுகின்றன. இக்குறையாளர் தொகை பெருகிவிடின், பண்டைச் சப்பான் பணத்தாள் போல. எனைப்பல அரசு.விதிகளும் மதிப்பிழந்து தொலையுமன்றோ? உலகமெல்லாம் தன்பால் நாணயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஒருவன் எதிர்பார்க்கிறான். அவ்வொழுங்கை உலகமும் தன்னிடமிருந்து எதிர் நோக்குகின்றது என்பதை மறந்து விடுகின்றான். குழந்தை களைப் பிறர்பால் இடம் பார்த்துப் பொய் சொல்லும் அறிவுடைய