பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநிலையறம் - 39

அமையாமை குற்றமோ எனின், அன்று: அஃது யாரொருவராலும் காத்துக்கொள்ள வாராப் பிறப்பு அனைய உலகியல்பு என்க.

மர முதலாய பிறவிகளிலும் நிலை யொப்பின்மை அறிவார், கற்புடைத் தாய்வயிற்று இரட்டைகள் பாலும் வேற்றுமை காண்பார், மனவறிவுட் பிறப்புடைய கோடா கோடி மக்கள்பால் நிலைப் பன்மை யிருப்பதைக் கண்டு, இஃதோர் ஒழுங்கின்மை என்று மயங்கார். மக்கள் நாம் வார்க்கும் அச்சுருவமோ, நினைமின் உலகம் ஒழுங்குட்பட்ட வேற்றுமையுடையது. அவ்வேற்றுமை யாற்றல்களால் உலகம் வளர்வது. நம் உடற் சிறுவுலகமும் கலப்புணவால் உரம் பெறக் காணுதும் அன்றோ! பிறப்பிற்கு ஒவ்வா, மன்பதை நலத்திற்கு ஒட்டாப் பொய்ம்மிடை வஞ்சகநிலை கண்டு, சான்றோர் வெய்து துடிப்பரே யல்லது, தூய நெஞ்சில் தோன்றிய மக்களின் தனித்தனிப் போக்குக் கண்டு கசவார். வையங் கெடுமென மயங்கார். உள்ளத் தனி வளர்ச்சியே உலகப் பொது வளர்ச்சி என்ற உண்மை கண்டவர், யாரொருவர் மனவறிவுப் பெருக்கத்தையும் இடையூ றெனத் தூற்றார்காண்.

மக்கள் வாழ்வு வெள்ளத்தின் ஒட்டம்போல. நிலை பலவாய்ச் செல்லும் அரிய எளிய உலகியல்புகளை உட்கொண்ட பெருமகனார் திருவள்ளுவர். நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல் என்றினைய அதிகாரத் தலைப்புக்களை ஒருவர் நோக்காது பார்த்த அளவிலேயே, நாம் பழகும் மக்களினம் ஒருநிலைப்பட்டதன்று நிலைவேறு மிகுந்தகுழு என்பது புலனாம். வலியறிதல், காலமறிதல், இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், வினைசெயல் வகை, குறிப்பறிதல், அவையறிதல், அமைச்சு, தூது என்ற தலைப்புக்கள் தம்மளவிற் காட்டுவது யாது? ஒரினப் பிறவியாகிய நாம் வலியானும், காலத்தானும், இடத்தானும், இனத்தானும், தொழிலானும், இவற்றைப் பயன் கொள்ளும் வழியானும் சாலப் பிரிவுடையோம் என்பது. ஈண்டு எண்ணிய தலைப்புக்களும் நல்குரவு, இரவு, ஈகை, இரவச்சம், கண்ணோட்டம், இடுக்க ணழியாமை, மருந்து, ஊழ் என வரூஉம் இன்ன பல தலைப்புக் களும் திருக்குறள் கற்பார்க்குப் பறைசாற்றும் ஒரடிப்படை