பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநிலையறம் 53

னென இகலினானே நன்றி கொல்லாதவன் என நாம் வாழ்வில் உதவினோன் நினைக்கலாமா என் கடன் உதவி செய்தல்; தன் கடன் நன்றி காட்டல் என்ற பகுத்தறிவு மெய் வாழ்க்கையை நல்கும். கடன் மாறி மயங்கலன்றோ உலகக் குழப்பத்திற்குக் காரணமாகிறது; தனி மக்களுள் பகைமையைப் பெருக்குகிறது. உதவுவாரெல்லாம் குறி யெதிர்ப்பை நீரராகிக் கட்டாயக் கைம்மாறு வேண்டுவரேல், மக்களினம் செத்துப்போம் என்ற எதிருணர்வாலன்றோ, செய்ந் நன்றி யறிதல் அதிகாரத்தை உதவி பெற்றார்மேல் வைத்து அறங் கரைந்தார். பயன் தெரிவார் பனைத்துணையாக் கொள்வர் (104) என்றும், செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை (110) என்றும், உதவியுண்டார் மேலிட்டு வலியுறுத்தினார்.

இந்நிலை ஒருபாலாக, நன்றி கொல்லும் மாக்களையும் பலராய் நம்மிடைக் காண்கின்றோம். காலமறிந்து பயன் தூக்காது தாமே முன்வந்து செய்த உதவிகளைப் பெற்றும், நன்றிக் கொலையோடு உதவினான் குடும்பத்துக்கும் கொலை சூழ்வாரும் உலகிற் சிலரல்லர். மணமானபின், ஈன்று புறந்தந்து சான்றோராக்கிய தந்தை தாய்த் தெய்வங்களை மிதித்து நடப்பாரும், அன்னோர் முதுமைப் பருவத்துச் செவிலிபோல் காவாமையே யன்றி, இக்கிழடுகள் காடேகும் நன்னாள் எந்நாளோ என்று வெடுக்கென வீழ்வாரும், செருப்புத் தேய்த்துக் கழிப்பதுபோல நலனுண்டு மெலிவித்த மனைவியைப் பரத்தமைப் பற்றால் வைவாரும், ஏறப் படி தந்தானை ஏறியபின் காலால் உதைப்பாரும் நம்மிடை அரியரல்லர். எனவாங்கு நன்றிக் கொலை செய்ததன் மேலும், வாழ்வு அறுக்கும் கயவர்களைக் காண்கின்றோம். வளர்த்த கிடாய் மார்பிற் பாய்ந்தாற்போலும் இந்நிலைக்கண், பயன் தூக்காது உதவினார் நடக்கை யாது? மரத்தின் மேலிருந்துகொண்டே அதன் கிளையை வெட்டுகிறான்! நிலத்தின்மேல் நின்று கொண்டே அதற்குக் குழி தோண்டுகிறான். நம்மால் வளர்ந்துகொண்டே நம்மைக் கீழறுக்கிறான். இந்நிலைக்கென்று,

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை (151)