பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் நிலை 59

இன்பம் அறியார் கொல் என்ற குறள் எனக்கு அன்று என ஒதுக்கிவிட வேண்டுமா? இரப்பான் வெகுளாமை வேண்டும் என்ற குறளை, ஒருசெல்வன் தனக்கு அன்று எனத் தள்ளிவிட் வேண்டுமா? அவரவர் வாழ்நிலையொடு பொருத்திக் குறள் கற்க என்னும் நும் வன்புறையை நம்பினார் யாது கொள்வர் எனின், வாழ்க்கைத் துணை நல அதிகாரத்தை ஆண் கற்கவேண்டா. பெண் வழிச் சேறல் அதிகாரத்தைப் பெண் கற்க வேண்டா. மக்கட் பேறு அதிகாரத்தை அப்பேறில்லாதார் கற்க வேண்டா. இல்வாழ்க்கை யதிகாரங்களையும் காமத்துப்பால் முழுமையையும் துறவி கற்க வேண்டா. உழவு, தூது, ஒற்றாடல், அமைச்சு, படைமாட்சி அதிகாரங் களைப் பிறர் கற்கவேண்டா எனவாங்குக் குறள் குறளாக அதிகாரம் அதிகாரமாகத் திருக்குறளை ஒதுக்கும் போக்கு விளையும் அன்றோ? தன்னிலைக்குப் பொருந்திய பகுதிகளைக் கல்; பொருந்தாப் பகுதிகளை விடு என ஓர் கழிப்பு உணர்ச்சியை நும்முரை தூண்ட வில்லையா? பிரிவினை குறள் நூலகத்துக்கும் ஆயிற்றுக்கொல்! முழுவதும் கற்றாகவேண்டிய ஒருநூல் குறளன்றோ இன்னதோர் துண்டுபடு குறட் கல்வியை மக்களிடைப் பரப்பாதீர்” என வேகஞ் செறிந்த அன்பினராய் அன்னோர் எடுத்துரைத்தனர்.

கற்றற்கு உரிய குறள்கள், கல்லாது ஒதுக்கப்படும் குறள்கள் என்றதோர் பிளவுக் கருத்து என் சொற்பொழிவால் யாரொருவர் உள்ளத்தும் விழுந்திருக்கு மேல், ஐயன்மீர்! அவ்விழுக்காடு பிழை: முற்றும் பிழை. இவன் சொல்வன்மைக் குறையுடையான் என்று என்னைப் பழித்து அக்கருத்தை அகற்றிக் கொண்மின்| குறளனைத்தும் யாண்டும் யாரும் கசடறக் கற்கத் தகும் சால்புடையவை என்பதுவே என் அறிவுத் துணிபு. தமிழ் மகளும் தமிழ் மகனும் குழவிப்பருவம், கேள்விப் பருவந்தொட்டே குறள் முழுதும் பயிலவேண்டும். அகம் குறளாதல் வேண்டும். புறத்தே குறட்சுவடி மிகையாதல் வேண்டும் என்பதுவே என் உள்ளம். இம்முழுத் துணிபிற்கு மாறாக முன்னும் சொல்லிற்றிலேன்: இனியும் சொல்வேனல்லேன். நிற்க.

வள்ளுவர் நெஞ்சின் அடிப்படை என் திருக்குறளின் அடிப்படைதான் என்கொல்? செயல், செயல், செயல்.