பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 0 - வள்ளுவம்

‘பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம் (1000) என்றும் வள்ளுவரே ஒப்புவர். நாம் அறியும் செல்வப் பெரியோர் பலர் மனத்தைக் கொன்று நேர்மையைச் சிறையிட்டுப் பூட்டி வைத்தபின் பொருள் திரட்டியோராகவே உளர். அரசியல் விதிகளும் நேர்மைக் கொலைக்குப் பெருங்காரன மாகுப, ஒழுக்கமுடையார்க்கே இடையூறாய் அதனை மறந்தார்க்கு ஊன்றுகோலாய் அமைப. பொருளின் வரவும் செலவும் உலகத்து ஒரு கணிப்பிற்கு உட்பட்டு நிற்கவில்லை. பெற்றோர் தம் கல்வியறிவு ஒழுக்கங்களை மக்கட்கு மாற்றவியலாது. இவை கைமாறத்தக்க பொருள்கள் அல்ல. செல்வம் ஒரு நொடியில், ஓர் எழுத்தில், ஆள் மாறத்தகும் எண்மையுடையது. வழக்காடுவார்க்குச் சட்டம் போலச் செல்வம் யார்க்கும் எந்நிலைக்கண்ணும் வளைந்து கொடுக்கும் தன்மைத்து. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் பெறுதலும், செவ்வியான் கேடு உறுதலும், அறத்தின்கண் வாழ்வான் செல்வத் தாழ்வு படுதலும் பொரு ளுலகத்து இயற்கை.

நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வஞ் செயற்கு (375)

எனப் பொருளின் பண்பற்ற இயற்கையை வள்ளுவரும் அறிவர். அறிந்து வைத்தும், வாழ்க்கைச் செலவிற்கு வேண்டிய பொருளை நேர்வழியால் யாரும் ஈட்டவியலும் என்பதுவே அவர் துணிபு.

பொருள் யார்க்கும் வேண்டும்; அதனை யாரும் நன்னெறியால் ஈட்ட வேண்டும் என்பது வள்ளுவம். இவ்வதிகாரப் பொருட் கொள்கையை இனிப் பல நிலைகளில் ஆராய்வாம். பொருளில் லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247) என உவமையானும் பொருளல்லது இல்லை பொருள் (751) என உண்மையானும் வலியுறுத்திய வள்ளுவர், இல்லாரை எல்லாரும் எள்ளுவர் (752) என்று ஒர் உலகியல்பு கூறினார். வறியோனைச் செல்வரும் சிறுமைப்படுத்துவர். என்போல் இவனும் ஒரு வறளிதானே எனப் பிற வறியோரும் சீரழிப்பர். ஈன்ற தாயும் தன் மகன் என நினையாது பிறன்போல நோக்குவள். இன்னோர் ஒருபாலாக, யாமும் இகழ்வேம் என்று வள்ளுவர் தம்மையும் இகழ்வார் கூட்டத்தொடு உளப்படுத்திக் கொள்ளும் குறிப்பு, எல்லாரும் எள்ளுவர் என்ற நடைக்கண்