பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனுடைப் பெருமக்களே!

வணக்கம் பல. நெருநல் மாலைச் சொற்பொழிவில், பொருளிட்டமும் ஈட்டு நெறியும்பற்றி, வள்ளுவர் நெஞ்சினை யான் அறிந்தவாறு விரித்துரைத்தேன். செல்வத் தொடர்புடைய குறள்கள் நூற்றுக்கு மேற்பட்டன. அக்குறளகத்துப் பொதிந்த ஆசான் எண்ணங்கள் ஒளிக்கதிர்போல் நுண்ணியவாயினும், அறியாமை இருள் அகற்ற வல்ல பொய்யா விளக்குகள். அறிதற்கு அரியன என்று மலைத்து அறியவேண்டுமவற்றை அறியாது மடிதல் சாவுநோக்கியின் இயல்பு. அரிய என்று ஆகாத இல்லை. (537) என வீறு சான்று உரம் பெற்று மலைபுரட்டும் முயற்சி கோடல் வாழ்வு நோக்கியின் துணிபு. ஆதலின் வாழ்வாங்கு வாழ விழைவார் அரிதின் முயன்று வள்ளுவர் நெஞ்சங்கண்டு வாழ்கதில். பொருட் குறள் அனைத்தையும் ஒன்று விடாது எடுத்துரைப்பது என் எண்ணமன்று. அவற்றை அவரவர் நிலைக்கு ஏற்ப மேற்கொண்டு தழுவல் கற்பார் கடன்.

செல்வம் குறித்த முச்சொற்பொழிவுகளுள் இரண்டாவதாகப் பொருட்பயனிலை பற்றி ஆராய்வோம். அறிவுப் பயன் வேண்டிக் கற்கின்றோம். ஒழுக்கத்து நல்வாழ்வு வேண்டி அறிவு பெறுகின்றோம். அது போல் பொருளிட்டமும் பயன் நோக்கியது. கல்வி கல்விக்கே, அறிவு அறிவுக்கே, பொருள் பொருளுக்கே என்ற கூற்று எவ்வாற்றானும் நடைமுறைக்கு ஒவ்வாது. ‘கற்றதனால் ஆய பயனென் கொல் (2) என்றும், அறிவினான் ஆகுவது உண்டோ (315) என்றும் கல்வியறிவுகளுக்குப் பயனுண்மை காட்டுமாப் போல, செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன் (524) ஒன்று உண்டு எனக் காட்டுவர்.