பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பயனிலை 83

வாழலாமே என்று வன்கண்மை நினையாதே என்பார், வல்லாங்கு வாழ்தும் என்னாது என்று அறிவுறுத்தினார். கைப்பொருள் எவ்வாறேனும் விரைவில் நம் கையை விட்டு நீங்கித் தொலைய வேண்டும் என்ற கருத்தால், நெருப்பை மடியிற் கொண்டாற்போலத் துடிதுடித்து, “யானும் கொடுப்பேன் நீயும் கொடு எனக் கொடுத்தற்கு உதவி ஆள் சேர்த்தார். இன்னார்க்குத்தான் ஈவது என்று ஒரு வரையறை கொள்ளின், கைப்பொருள் கொடுபடாது எஞ்சிப்போம் என்ற துயரால் எல்லார்க்கும் கொடுமதி எனப் பொதுமை காட்டினார். நமக்குக் கொடுத்தற்கென ஒருவர் இருக்கும்போது நாம் ஏன் செல்வத்தை இறுகப் பிடிக்க வேண்டும் என்ற கருத்தால், குமணன் நல்கிய வளனைக் கொடுமதி’ எனக் குறைவின்மை சுட்டினார். ஈட்டிக் கொடைமடம் பட்ட பண்டைத் தமிழ் வள்ளல்கள் போலாது, அவர்பால் இரந்து கொடைமடம் பட்ட பண்டைத் தமிழ்ப் புலவருள் பெருஞ்சித்திரனாரும் ஒருவர். உலகத்துப் புலவர் பல்லோரின் வரலாறு வறுமையையும் கொடைமையையும் ஒருங்கே காட்டி நிற்பன.

அன்றே என்தன் ஆவியும்

- உடலும் உடைமை எல்லாமும் குன்றே யனையாய் என்னைஆட்

கொண்ட போதே கொண்டிலையோ?

என்ற திருவாசகப்படி, வாழ்க்கையில் அனைத்தும் வழங்கும் துறவு நிலை கற்று வருவதில்லை. கற்பித்தாலும் வரப்போவதில்லை. உடம்பின் அழகுபோல் இயல்பில் அமைந்து கிடக்கும் இவ்வுள்ளழகு உயர்ந்தது, ஒப்பில்லாதது என வள்ளுவர் அறிவார். விருந்தோம்பி மிச்சில் மிசைவான் உயர்ந்தவன், ஒப்பில்லாதவன் என வள்ளுவர் அறிவர். இக் கடன்அறி வாழ்க்கையர் நல்குரவு எய்தல் பள்ளத்து நீர் வீழ்வு போல் இயல்பு எனவும் வள்ளுவர் அறிவர். இன்னோர் பொருள் வறுமையை வாழ்க்கைத் தாழ்வாக, கெடுவாக உலகம் கருதாது. கொடுத்துப் பெற்ற வறுமை காலாடி வீண் செலவு செய்து பற்றிய வறுமையோடு வைத்து எண்ணத்தக்க தன்று.

ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து (220)